வல்லரசு நிலையை நோக்கி நகர்வு - 11 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியாவின் காப்புரிமை விண்ணப்பங்கள் சர்வதேச அளவை விட அதிகம்!
Filing of patents increases by more than 50% in the last 7 years

By : Kathir Webdesk
இந்தியா மற்றொரு சாதனையை காப்புரிமை தாக்கலில் நிகழ்த்தியுள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்கள் தாக்கல் எண்ணிக்கை, 2022 ஜனவரி முதல் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், சர்வதேச காப்புரிமை தாக்கலின் எண்ணிக்கையை விட அதிகரித்துள்ளது. மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 19,796 விண்ணப்பங்களில் 10,706 விண்ணப்பங்கள் இந்தியாவைச் சேர்ந்தவையாகும். 9090 விண்ணப்பங்கள் இந்தியாவைச் சேராதோர் தாக்கல் செய்தவை.
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை டிபிஐஐடி இந்த விஷயத்தில் மேற்கொண்ட தொடர் முயற்சிகளை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர் விவகாரம், பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டியுள்ளார்.
அறிவுசார் சொத்துரிமையை வலுப்படுத்துவதில் டிபிஐஐடி மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக அறிவுசார் சொத்துரிமை கோரி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. உலக புத்தாக்க குறியீடு தரவரிசையில் முதல் 25 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற வேண்டும் என்ற லட்சியத்தை நெருங்கியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
காப்புரிமை தாக்கல் 2014-15ல் 42763 ஆக இருந்தது, 2021-22ல் 66440 ஆக அதிகரித்துள்ளது, 7 ஆண்டுகளில் 50% அதிகமாகும். 2014-15 ( 5978) உடன் ஒப்பிடுகையில் 2021-22 (30,074) இல் காப்புரிமை வழங்குவதில் கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.
பல்வேறு தொழில்நுட்பப் பகுதிகளுக்கு காப்புரிமைத் தேர்வுக்கான நேரம் டிசம்பர் 2016 இல் 72 மாதங்களிலிருந்து தற்போது 5-23 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. 2015-16ல் 81வது இடத்தில் இருந்த இந்தியாவின் உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் 2021ல் 46வது இடத்திற்கு அதிகரித்துள்ளது.
