Kathir News
Begin typing your search above and press return to search.

முப்படை தலைமை தளபதியின் உடல் இன்று மாலை ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்!

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள நஞ்சப்பசத்திரம் என்ற இடத்தில் கடந்த 8ம் தேதி பிற்பகல் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீப்பிடித்தது. இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத், ராணுவ உயர் அதிகாரிகள், கமோண்டாக்கள் என்று 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோரச்சம்பவம் இந்தியா முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியது.

முப்படை தலைமை தளபதியின் உடல் இன்று மாலை ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்!
X

ThangaveluBy : Thangavelu

  |  10 Dec 2021 2:49 AM GMT

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள நஞ்சப்பசத்திரம் என்ற இடத்தில் கடந்த 8ம் தேதி பிற்பகல் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீப்பிடித்தது. இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத், ராணுவ உயர் அதிகாரிகள், கமோண்டாக்கள் என்று 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோரச்சம்பவம் இந்தியா முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியது. விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட இறந்தவர்கள் 13 பேரின் உடல்களும் பெட்டியில் வைக்கப்பட்டு, அவர்கள் மீது தேசியக்கொடி போர்த்தப்பட்டது.

அதன் பின்னர் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு எம்.ஆர்.சி. ராணுவ முகாமிற்கு வீரர்கள் எடுத்து சென்றனர். அப்போது ராணுவ வாகனம் முன்பாக வீரர்கள் இசைக்குழு இசைத்தபடி வந்தனர். இதன் பின்னர் 13 பேரின் உடல்களும் முகாமில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. அப்போது தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள், பயிற்சி கல்லூரியை சேர்ந்த வெளிநாட்டு ராணுவ அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள் அமரர் ஊர்தி மூலம் ஏற்றப்பட்டு கோவை, சூலூர் விமானப்படை தளத்திற்கு எடுத்து வரப்பட்டது. அப்போது சாலை முழுவதும் பொதுமக்கள் நின்றபடி அஞ்சலி செலுத்தினர். மதியம் 2.50 மணியளவில் விமானப்படை தளத்தில் இருந்து 13 பேரின் உடல்களும் சி-130 சூப்பர் ஹெர்குலிஸ் ரக ராணுவ விமானத்தில் ஏற்றப்பட்டு டெல்லி கொண்டு செல்லப்பட்டது. நேற்று இரவு 7.35 மணிக்கு டெல்லி பாலம் விமான நிலையத்தை விமானம் சென்றடைந்தது. அங்கு அவர்களின் உடல்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக அடுக்கி வைத்தனர்.

முதலில் பிரதமர் மோடி அனைவருக்கும் பூக்கள் தூவியும், மலர் வளையம் வைத்தும் தனது இதபூர்வமாக அஞ்சலியை செலுத்தினார். அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதலை தெரிவித்தார். அதனையடுத்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார். அவர்களை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், ராணுவ தளபதி நரவனே, கடற்படை தளபதி ஹரிகுமார், விமானப்படை தளபதி சவுத்திரி, மத்திய பாதுகாப்பு செயலாளர் அஜய்குமார், மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள், தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

இதன் பின்னர் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் டெல்லியில் உள்ள காமராஜ் மார்க் பகுதியில் உள்ள அவர்களது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு இன்று (டிசம்பர் 10) காலை 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர். மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை ராணுவத்தினர் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் மதியம் 2 மணிக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது.

பின்னர் டெல்லி பிரார் சதுக்கத்தில் உள்ள சுடுகாட்டில் முழு ராணுவ மரியாதையுடன் பிபின்ராவத்தின் இறுதிச்சடங்கு இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதனால் டெல்லி முழுவதும் ராணுவத்தினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முப்படை தலைமை தளபதி மறைவு இந்தியா முழுவதும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் ஆங்காங்கே முப்படை தலைமை தளபதி மற்றும் சக உயர் அதிகாரிகளின் படங்கள் வைக்கப்பட்டு மரியாதை செலுத்தி வருகின்றனர். அது மட்டுமின்றி பள்ளி, கல்லூரி மாணவர்களும் மெழுகுவர்த்தி ஏந்தி தங்களின் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Daily Thanthi

Image Courtesy:The Indian Express


Next Story
கதிர் தொகுப்பு
Trending News