20 மாதங்கள் கழித்து தொடக்க பள்ளிகளை திறக்கும் கர்நாடக அரசு !
கர்நாடகாவில் கடந்த 20 மாதங்களாக பூட்டப்பட்டிருந்த 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகள் வருகின்ற 25ம் தேதி முதல் திறக்கப்படுவதாக கர்நாடக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
By : Thangavelu
கர்நாடகாவில் கடந்த 20 மாதங்களாக பூட்டப்பட்டிருந்த 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகள் வருகின்ற 25ம் தேதி முதல் திறக்கப்படுவதாக கர்நாடக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் கர்நாடகா மாநிலம் அதிகமான பாதிப்புகளை சந்தித்தது. பல உயிரிழப்புகளையும் சந்தித்தது. பெருந்தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்தது. தொற்று தற்போது குறந்து வரும் நிலையில் அந்த ஆண்டின் இறுதியில் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் நடத்தப்பட்டது. ஆனால் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்றின் 2வது அலையால் அங்கு மீண்டும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. தொற்று மீண்டும் கறைந்து வருவதை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் 6 முதல் 12ம் வகுப்பு வரையில் பள்ளிகள் திறக்கப்பட்டது.
இந்நிலையில், கர்நாடக பள்ளி கல்வித்துறை அமைச்சர் நாகேஸ் கூறியதாவது: 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிகள் வருகின்ற 25ம் தேதி முதல் திறக்கப்படுகிறது. முதல் வாரம் இந்த பள்ளிகள் மதியம் வரை செயல்படும். அதன் பின்னர் பள்ளிகள் முழுமையாக செயல்படும். மதிய உணவு வழங்கப்படும். மேலும் வகுப்பறைகள் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறுகிறது. வகுப்பறைகளில் 50 சதவீத மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்படுவர். பள்ளியிலேயே மாணவர்களுக்கு மதியம் உணவு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Dinamalar