இனி விளம்பரங்கள் தவறாக வழிகாட்டினால், இப்படியும் நடக்கும் - சாட்டையை சுழற்றும் மத்திய அரசு!

By : Kathir Webdesk
தவறாக வழிகாட்டும் விளம்பரங்களை தடுத்து நுகர்வோருக்கு பாதுகாப்பு அளிப்பதை நோக்கமாக கொண்டு தவறாக வழிகாட்டும் விளம்பரங்கள் மற்றும் அவற்றுக்கு ஒப்புதல் அளிப்பதை தடை செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் 2022-ஐ நுகர்வோர் நலத்துறையின் கீழ் உள்ள மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது.
ஆதாரம் இல்லாத உரிமை கோரல்கள், மிகைப்படுத்தப்பட்ட வாக்குறுதிகளை அளித்தல், தவறான தகவல்களை அளித்தல் போன்றவற்றால் நுகர்வோர் ஏமாற்றப்படாமல் இருப்பதை இந்த வழிகாட்டு நெறிமுறைகள் உறுதி செய்கின்றன. சரியான தகவல் பெறும் உரிமை தெரிவு செய்யும் உரிமை, பாதுகாப்பற்ற பொருட்களுக்கு எதிராக பாதுகாத்து கொள்ளும் உரிமை, சேவைகளுக்கான உரிமை என பல்வேறு உரிமைகளை மீறுவதாக இத்தகைய விளம்பரங்கள் இருக்கின்றன.
வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோருக்கான தண்டனையும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்கள், விளம்பரம் செய்வோர் தவறாக வழிகாட்டும் விளம்பரங்களுக்கு ஒப்புதல் அளிப்போர் ஆகியோருக்கு 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும்.
தொடர்ந்து தவறு செய்வோருக்கு ரூ.50 லட்சம் ரூபாய் வரையும் அபராதம் விதிக்கப்படலாம். தவறாக வழிகாட்டும் விளம்பரங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் நிறுவனம் இத்தகைய விளம்பர தயாரிப்புக்கும், ஒப்புதல் அளிப்பதற்கும் முதலில் ஓராண்டு வரையும் தொடர்ந்து விதிமுறைகளை மீறினால் 3 ஆண்டு வரையும் ஆணையத்தால் தடை விதிக்க முடியும்.
Inputs From: consumeraffairs
