ஹோலி, ஈஸ்டர் பண்டிகைகளுக்கு கட்டுப்பாடு விதிக்க, மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்.!
மீண்டும் 40 ஆயிரத்திற்கு மேல் கொரோனா தொற்று பதிவாகி வருகிறது. இதனால் மத்திய அரசு மாநிலங்களுக்கு அவரசமாக கடிதம் எழுதியுள்ளது.

By : Thangavelu
உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். தினமும் லட்சக்கணக்கான தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனை 10 ஆயிரத்துக்குள் மத்திய அரசு கொண்டு வந்தது. அதே போன்று உயிரிழப்புகளும் லட்சத்தை தாண்டி சென்றது.
இதனிடையே மீண்டும் 40 ஆயிரத்திற்கு மேல் கொரோனா தொற்று பதிவாகி வருகிறது. இதனால் மத்திய அரசு மாநிலங்களுக்கு அவரசமாக கடிதம் எழுதியுள்ளது.
இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 47,262 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,17,34,058 ஆக அதிகரித்துள்ளது. அதே போன்று 275 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,60,441 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே நாட்டில் சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் வருகின்ற பண்டிகைகளை கருத்தில் கொண்டு உள்ளூர் கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு, சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் ஆர்டி அஹுஜா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், கொரோனா தொற்றுக்கு எதிரான போர் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. அண்மை காலமாக தொற்று அதிகரித்து காணப்படுகிறது. அதே நேரத்தில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.
மேலும், ஹோலி, ஈஸ்டர், ஈத் பெருநாள் போன்ற பண்டிகை வருகிறது. இதனால் மக்கள் பொது இடங்களில் அதிகமாக கூடுவதை தடுக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
