இந்தியாவின் உதவியால் பூடானில் நவீன மருத்துவமனை- இரு நாட்டுப் பிரதமர்கள் தலைமையில் திறப்பு!
பூடானில் இந்தியாவின் உதவியால் கட்டப்பட்ட மருத்துவமனையை இரு நாட்டு பிரதமர்களும் திறந்து வைத்தனர்.
By : Karthiga
பூடானில் இந்திய உதவியில் கட்டப்பட்ட தாய் சேய் நல மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி- பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கோ ஆகியோர் சனிக்கிழமை திறந்து வைத்தனர். தலைநகர் திம்புவில் திறக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனை 150 படுக்கை வசதிகளை கொண்டதாகும். குழந்தைகள் மருத்துவம் ,மகப்பேறு மருத்துவம் ,மகளிர் நல சிகிச்சை, மயக்கவியல் ,அறுவை சிகிச்சை அரங்கம், பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட வசதிகள் இங்கு நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில் ,"பூடான் நாட்டு மக்களின் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக திகழும் மருத்துவமனையில் தரமான மருத்துவ சேவைகள் வழங்கப்படும். ஆரோக்கியமான எதிர்கால தலைமுறையினரை உருவாக்குவதில் இந்த புதிய மருத்துவமனை முக்கிய பங்களிக்கும்" என குறிப்பிட்டுள்ளார். பூடானில் சுகாதாரத்துறை மேம்பாட்டுக்கு இரு நிலைகளாக இந்தியா உதவி அளித்து வருகிறது.
ரூபாய் 22 கோடியில் கட்டப்பட்டுள்ள முதல் மருத்துவமனை கடந்த 2019ல் செயல்பாட்டுக்கு வந்தன .பூடானின் 12-வது ஐந்தாண்டு திட்டத்தின் ஒரு பகுதியாக ரூபாய் 119 கோடி மதிப்பிலான இரண்டாம் கட்ட மருத்துவமனை மேம்பாட்டு பணிகள் சமீபத்தில் முடிந்தன. சுகாதாரத்துறை அமைச்சர் டான் டின் வாங்கக் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியாவிடம் இருந்து பல உதவிகளை பூடான் பெற்று வருகிறது. குறிப்பாக சுகாதாரம் சார்ந்த வசதிகளை பெற்றுள்ளோம்.
இந்த வளாகத்தில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு அமைப்பதற்கான திட்டமும் உள்ளது .தற்போது புற்றுநோயால் பாதிக்கப்படும் பூடான் மக்களை இந்தியாவில் சிகிச்சை பெற பரிந்துரைக்கப்படுகிறது .புற்றுநோய் சிகிச்சை பிரிவு செயற்பாட்டுக்கு வரும் நிலையில் நாட்டின் மருத்துவ வசதிகள் மேம்படும் என்றார்.
SOURCE :Dinamani