இந்திய நிதி அமைச்சகத்தில் மற்றொரு சாதனை: அதிகரிக்கும் இந்திய பொருளாதாரம் !
தொடர்ந்து முன்னேறும் இந்திய பொருளாதாரத்தின் நிலைமை.
By : Bharathi Latha
இந்தியாவில் கடந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக பொருளாதாரத்தில் மிகப்பெரிய அளவில் பின்னடைவு ஏற்பட்டது என்று சொல்லலாம். ஏனெனில் மக்களும் பெரும்பாலும் நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டார்கள் என்று ஒரு சர்வே ஆய்வு முடிவு சொல்கிறது. ஏனென்றால், கடந்த ஆண்டு பெரும்பாலான மாதங்களில் ஊரடங்கு அமலில் இருந்ததன் காரணமாக பெரும்பாலான வேலைகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக அன்றாட வேலை செய்யும் மக்களுக்கு இது பெரும் பொருளாதாரப் பின்னடைவை ஏற்படுத்தியது என்று சொல்லலாம். நம் மத்திய நிதி அமைச்சகம் மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கைகள் காரணமாக தற்போது இந்திய பொருளாதாரம் தன்னுடைய வளர்ச்சி விகிதத்தை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக சரக்கு மற்றும் சேவை வரிகளில் இதன் சாதனை மிகப்பெரிய அளவில் உள்ளது. நாட்டில் கடந்த ஜூலையில் மொத்த GST வசூல் ரூ.1,16,393 கோடி என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "2021 ஜூலை மாதத்தில் நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரிகள் வருவாய் ரூ. 1,16,393 கோடி வசூலாகியுள்ளது. கடந்த 8-வது மாதங்களுக்குப்பின் GST வரி வருவாய் ஒரு லட்சம் கோடிக்கும் கீழ் கடந்த மாதம் சரிந்த நிலையில் மீண்டும் ஜூலை மாதம் ஒரு லட்சம் கோடியை எட்டியுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.87,422 கோடி வசூலாகிய நிலையில் அதைவிட 33 % இந்த ஆண்டு ஜூலை மாதம் வசூலாகியுள்ளது. இதில் மத்திய GST வரி ரூ.22 ஆயிரத்து 197 கோடியாகும். மாநில GST வரி ரூ.28 ஆயிரத்து 541 கோடியாகும். ஒருங்கிணைந்த GST வரி ரூ.57 ஆயிரத்து 864 கோடியாகும்.இதில் செஸ் வரியாக ரூ.7 ஆயிரத்து 790 கோடி கிடைத்துள்ளது" என்று நிதிஅமைச்சகம் தெரிவித்துள்ளது.
Image courtesy: times of India news