எந்த ஆண்டும் இல்லாத வகையில் பிப்ரவரியில் நிகழ்ந்த அதிசயம்: இந்திய ரயில்வே புதிய சாதனை!
இந்திய ரயில்வே 124.03 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டு சாதனை.
By : Bharathi Latha
இந்தியன் ரயில்வே 2023 பிப்ரவரியில் இதுவரை எந்த பிப்ரவரி மாதத்திலும் இல்லாத அளவுக்கு 124.03 மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை விட இந்த ஆண்டு 4.26 மெட்ரிக் டன் சரக்குகளை இந்திய ரயில்வே கூடுதலாகக் கையாண்டுள்ளது. அதாவது, 2022 பிப்ரவரியை விட 3.55% வளர்ச்சி கண்டுள்ளது. இதன் மூலம், இந்திய ரயில்வே தொடர்ந்து 30 மாதங்களாக முந்தைய மாதத்தை விட அதிக சரக்குகளை ஏற்றிச் சென்று சாதனை புரிந்து வருகிறது.
அதிகபட்சமாக 3.18 மெட்ரிக் டன் நிலக்கரியும், அதற்கு அடுத்தபடியாக 0.94 மெட்ரிக் டன் உரங்களும் இந்திய ரயில்வேயால் கையாளப்பட்டுள்ளது. 2022-23 நிதியாண்டில் ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியும் சரக்கு வணிகம் சிறப்பாக நடைபெறுவதற்கான மற்றொரு காரணம் ஆகும். கடந்த ஆண்டு பிப்ரவரியில் 2,966 பெட்டிகளில் ஆட்டோமொபைல் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், 2022-23 நிதியாண்டில் பிப்ரவரி வரை 5,015 பெட்டிகள் ஏற்றப்பட்டுள்ளன. இது 69% வளர்ச்சி ஆகும்.
2021-22-ம் நிதியாண்டில் 1278.84 மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்ட நிலையில், 2022 ஏப்ரல் முதல் 2023 பிப்ரவரி வரை ஒட்டுமொத்தமாக 1367.49 மெட்ரிக் டன் சரக்கு கையாளப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 6.93% வளர்ச்சி ஆகும். மின் உற்பத்திக்காக நிலக்கரி விநியோகத்தை அதிகரிக்க இந்திய ரயில்வேயின் தொடர்ச்சியான முயற்சிகளே அதிகளவில் நிலக்கரி கொண்டு செல்லப்பட்டதற்குக் காரணமாகும்.
Input & Image courtesy: News