ஆசியான் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இந்தியா ஒதுங்கியது சரியானதே: பொருளாதார நிபுணர்கள் பாராட்டு.!
ஆசியான் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இந்தியா ஒதுங்கியது சரியானதே: பொருளாதார நிபுணர்கள் பாராட்டு.!

By : Rama Subbaiah
ஆர்.சி.இ.பி ஒப்பந்தம் என்பது, மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, இந்தோனேஷியா, புரூனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா ஆகிய பத்து ஆசியான் நாடுகள் மற்றும் இந்தியா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, தென்கொரியா, நியூசிலாந்து ஆகிய ஆறு நாடுகள் என மொத்தம் 16 நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தகத்தை ஏற்படுத்தும் ஓர் ஒப்பந்தம். ஒருங்கிணைந்த பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் என்ற இந்த ஒப்பந்தத்தால், 16 நாடுகளுக்குள் வரியில்லாமல் பொருள்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்துகொள்ள முடியும்.
சென்ற ஆண்டு இதே காலக் கட்டத்தில் தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் மேற்கண்ட 16 நாடுகள் கலந்துகொண்ட ஆர்.சி.இ.பி இறுதிக்கூட்டம் நடைபெற்றது. அப்போதுதான், இந்த ஒப்பந்தத்திலிருந்து இந்தியா விலகிக் கொண்டது. மற்ற 15 நாடுகள் வரியில்லா வர்த்தகத்துக்கு உடன்பட்டு ஏற்றுமதி இறக்குமதியை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால் ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொண்டதால் நல்ல வாய்ப்பை இந்தியா நழுவவிட்டிருக்கிறது என்றுதான் பலர் நினைத்தனர். ஆனால், இந்த ஒப்பந்தத்தில் இந்தியா சேராமல் விலகியதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது, சீனப் பொருள்களுக்கு இந்தியச் சந்தையைத் திறந்துவிட வேண்டாம் என நினைப்பதுதான் என இந்தியா தரப்பில் கூறப்பட்டது.
சீனா மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகள் மிக அதிகமாக உற்பத்தி செய்யும் பால் பொருள்களும், விவசாய விளைபொருள்களும், சிறு கைவினை தயாரிப்பு பொருள்களும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தால் நம் நாட்டுக்கு தங்கு தடை இன்றி உள்ளே வந்துவிடும். இதனால் நம் நாட்டு கிராமப்புற உற்பத்தி பொருட்களின் தேவை நகர்ப்புறங்களில் குறைந்து விடும் என சிந்தித்த பிரதமர் நரேந்திர மோடி சென்ற ஆண்டே இந்த ஒப்பந்தத்தை கையெழுத்திடாமல் விலகியதை அப்போது நம் நாட்டு பத்திரிக்கைகளும், பொருளாதார நிபுணர்களும் பாராட்டினர்.
ஆனால் இந்த அமைப்பில் உள்ள நாடுகள் தொடர்ந்து இந்தியாவை வற்புறுத்தி வந்தன. இந்தியாவின் ஏற்றுமதிப் பொருள்களுக்கு கூடுதல் சலுகைகள் தருவதாகவும் வாக்களித்தும் இந்தியா தனது நிலையில் இருந்து மாறாமல் காணொலி வாயிலான இந்த ஒப்பந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் இந்த ஆண்டும் ஒதுங்கியது. இதற்கு இந்தியா கூறும் காரணம் நமது உள்நாட்டு உற்பத்தி அனைத்து துறையிலும் தன்னிறைவு அடைந்திருந்தாலும், ஏற்றுமதிக்கு ஆசைப்பட்டு அதற்கு பதிலாக மற்ற நாடுகளின் இறக்குமதியை தடை இல்லாமல் அனுமதித்தால் தனது நாட்டின் கிராமப் புற பொருளாதாரம் சரிவை சந்திக்கும் என கூறுகிறது.
மேலும் இந்த அமைப்பின் கீழ் உள்ள மற்ற நாடுகள் தங்கள் மொத்த உற்பத்தியில் 30 சதவீதத்தை ஏற்றுமதி செய்கின்றன. ஆனால் நம் நிலை தொடர்ச்சியாக அவ்வாறு இல்லை, அதேசமயம் நம் ஏற்றுமதிப் பொருள்களுக்கு அங்கு கிடைக்கும் தற்போதைய விலை மிகக் குறைவாகும், எனவே நமக்கு ஏற்றுமதியும் வேண்டாம், இறக்குமதியும் வேண்டாம் என இப்போதுள்ள சூழ்நிலைக்கேற்றவாறு இந்தியா முடிவெடுத்துள்ளது சரியானதே என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
