இந்தோ - பசிபிக் பிராந்திய பாதுகாப்பில் இந்தியாவின் வலிமை மேலும் அதிகரிப்பு: கைகோர்த்த இங்கிலாந்து.!
இந்தோ - பசிபிக் பிராந்திய பாதுகாப்பில் இந்தியாவின் வலிமை மேலும் அதிகரிப்பு: கைகோர்த்த இங்கிலாந்து.!

By : Rama Subbaiah
தென் சீனக்கடலில் உள்ள பல்வேறு தீவுகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால் அந்த தீவுகள் தங்களுக்கு சொந்தமானது என ஜப்பான், வியட்நாம், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கூறி வருகின்றன. இது தவிர இந்தியா மற்றும் பூடான் நாடுகளின் எல்லையிலும் சீனா ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் சீனாவுக்கும் மேற்கூறிய நாடுகளுக் கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது.
இதேபோல் இந்தியாவை அச்சுறுத்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலும் ஆதிக்கம் செலுத்துவதற்கான முயற்சிகளில் சீனா ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக மேற்கிந்திய கடல் பகுதிகளில் இந்திய கடல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையில் கடற்கொள்ளை கூட்டத்தின் கைவரிசை உள்ளது.அதன் பின்னணியில் சீனா இருக்கலாம் என கருதப்படுகிறது. இதனால் இந்தியா அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா வுடன் கடல்பாதுகாப்பு மற்றும் இராணுவ உதவிகள் தொடர்பான பயிற்சித் திட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் சீனாவுடனான உறவுகள் மோசமடைந்து வரும் சூழ் நிலையில் ஐரோப்பியாவைப் பொறுத்தவரை பிரான்ஸ் நமக்கு உற்ற நண்பனாக இருந்து உதவி செய்து வருகிறது. இந்தோ - பசிபிக் பகுதிகளிலும் மற்ற இராணுவ பாதுகாப்பு விவகாரங்களிலும் பிரான்ஸ் இந்தியாவுக்கு இணக்கமாக இருந்து வரும் நிலையில், இப்போது இங்கிலாந்தும் இந்தோ பசிபிக் பிராந்திய விவகாரத்தில் இந்தியாவுக்கு பக்கபலமாக இருக்க முன்வந்துள்ளது.
இந்தியா - சீனா இடையே மோதல் முற்றிய நிலையில் இருந்தபோது இந்தியாவுக்கு ஆதரவாகவோ அல்லது சீனாவுக்கு ஆதரவாகவோ கருத்து எதையும் சொல்லாமல் இருந்து வந்த இங்கிலாந்து இப்போது இந்தியாவுக்கு இராணுவ ரீதியாகவும், இந்தோ - பசிபிக் பகுதிகளில் பிராந்திய அமைதி ஏற்படுத்தும் பணிகளிலும் உதவ முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2 மாதங்களாக இந்தோ - பசிபிக் கடல் பிராந்திய பகுதிகளில் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து இரு நாடுகளும் பரஸ்பரம் பகிர்ந்து வருகின்றன.
இந்நிலையில் இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டொமினிக் ராப் நேற்று இந்தியா வந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார். அமைச்சர் ஜெய்சங்கரும் அவரும் இராணுவம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக 5 முக்கிய அம்சங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினர்.
இது குறித்து டொமினிக் ராப் கூறுகையில் இந்தியா - இங்கிலாந்து இடையே நிலவும் நெருக்கமான மூலாபாய உறவுகள் மேலும் வளரும். இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இராணுவ ரீதியான உதவிகளுக்கு இங்கிலாந்து எப்போதும் துணை நிற்கும். இந்தோ - பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு எப்போதும் இங்கிலாந்து முக்கியத்துவம் அளிக்கும். பயங்கரவாதம் மற்றும் கடற் பாதுகாப்பு விவகாரங்களில் இங்கிலாந்து இந்தியாவுடன் முன்பைவிட வலுவாக கைகோர்க்கும் என்றார்.

