மனிதாபிமானம் இல்லாத நபர்.. நாயை காரில் கட்டி இழுத்துச்சென்று அட்டூழியம்.!
மனிதாபிமானம் இல்லாத நபர்.. நாயை காரில் கட்டி இழுத்துச்சென்று அட்டூழியம்.!

By : Kathir Webdesk
திருவனந்தபுரம் அருகே நாயை காரில் கட்டி இழுத்துச்சென்ற ஓட்டுநரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வந்தது. அந்த வீடியோவில், கார் ஒன்றின் பின்புறம் நாய் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதன்பின்னர் கார் செல்லும்போது நாய் பின்புறமாக ஓடுகிறது.
ஆனால் சிறிது நேரத்தில் நாய் கீழே விழுந்து சாலையில் தரதரவென இழுத்துச்செல்லப்படுகிறது. இதற்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இது பற்றிய தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் திருவனந்தபுரம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த யூசுப் என்பதும் அவர் கார் உரிமையாளர் மற்றும் ஓட்டுநராக உள்ளார் என்பதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் கூறியதாவது: காரை ஓட்டிய யூசுப் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்துள்ளார். அவர் மீது விலங்குகளை கொல்வது, விஷம் கொடுப்பது, துன்புறுத்துவது அல்லது பயனற்றதாக ஆக்குவது மற்றும் விலங்குகளுக்கான கொடுமையைத் தடுக்கும் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர் ஏற்கெனவே பல நாய்களை இது போன்று காரில் கட்டி இழுத்து சென்றது தெரியவந்துள்ளது. அந்த சாலையில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற நபர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதன் காரணமாகத்தான் யூசுப்பை கைது செய்ய முடிந்தது.
