காசி தமிழ் சங்கமம்: தொன்மை கலாச்சாரங்களை மீட்டெடுக்கும் என குவியும் பாராட்டுக்கள்!
காசி தமிழ் சங்கமம் மூலம் நாட்டின் தொன்மையான கலாச்சாரங்களை செழுமைப்படுத்த முடியும் வாரணாசி மாவட்ட ஆட்சியர் கருத்து.
By : Bharathi Latha
காசி தமிழ் சங்கமம் மூலம் நாட்டின் தொன்மையான கலாச்சாரங்களை செழுமைப்படுத்த முடியும் என்று உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மாவட்ட ஆட்சியர் ராஜலிங்கம் தெரிவித்துள்ளார். காசி தமிழ் சங்கமம் நிகழ்வுக்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்துவரும் ராஜலிங்கம், பத்திரிகை தகவல் அலுவலகத்திற்கு பேட்டியளித்தார். காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் காலம் காலமாக நிறைய தொடர்புகள் இருந்துள்ளன. தமிழ்நாட்டில் இருப்பவர்கள் காசிக்கு ஒரு முறையாவது சென்று வர வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பதை அவர் பேசும்போது தெரிவித்தார்.
பாரதப் பிரதமரின் "ஒரே பாரதம், உன்னத பாரதம்" கோட்பாட்டின் கீழ், நாட்டின் ஒரு பகுதி மக்களின் கலாச்சாரத்தை இன்னொரு பகுதி மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு கலாச்சாரத்தோடு இன்னொரு கலாச்சாரம் இணைய வேண்டும். பழமையான கலாச்சாரங்களை இதன் மூலம் செழுமைப்படுத்த முடியும் என்ற சிந்தனையில் உருவாகி இருப்பதுதான் காசி தமிழ் சங்கமம் என்று அவர் கூறினார். தமிழ்நாட்டின் வேறு வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் 12 குழுக்களாகப் பிரிந்து ஒவ்வொரு குழுவாகக் காசிக்கு வருகிறார்கள். நான்கு நாட்கள் ரயில்பயணம், நான்கு நாட்கள் பல்வேறு பகுதிகளுக்கு செல்லுதல், நிழ்வுகளில் பங்கேற்றல் என எட்டு நாள் பயணமாக இந்தக் குழுவினர் காசிக்கு வருகிறார்கள். அவர்கள் காசியின் கலாச்சாரம், சுற்றுலாத்தலங்கள், உணவு வகைகள் பற்றி தெரிந்து கொள்கிறார்கள்.
எந்தக் குழுவில் இடம்பெற்று வருகிறார்களோ அவர்களுக்கு இணையான குழுவினருடன் காசியில் கலந்துரையாடுகிறார்கள். டிசம்பர் 16 வரை நடைபெற உள்ள நிகழ்ச்சிகளை ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டின் மிக மிக முக்கிய பிரமுகர்கள் தலைமை தாங்கி நடத்துகிறார்கள். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கும், இந்தியா என்ற உணர்வுடன் இணைவதற்குமான நிகழ்வுதான் காசி தமிழ் சங்கமம் என்று அவர் குறிப்பிட்டார். இதுவரை வந்த குழுவினர் மிகுந்த ஊக்கமளிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்துள்ளனர் என்றார் அவர். காசியிலிருந்து இவர்கள் பிரயாக்ராஜ், அயோத்தியா உள்ளிட்ட இடங்களைப் பார்வையிட்டபின் தமிழ்நாட்டுக்குத் திரும்புவார்கள் என்றும் ராஜலிங்கம் தெரிவித்தார்.
Input & Image courtesy: PIB