கொரோனா தொற்று உச்சத்தை கடந்துவிட்டது ! - எய்ம்ஸ் பேராசிரியர்!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை வந்தபோது, பல மாநிலங்களில் தொற்று கட்டுக்குள் வந்துவிட்டது. ஆனால் கேரளாவில் மட்டும் தொற்று குறையாமல் அதிகரிக்க தொடங்கியது.
By : Thangavelu
கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு உச்சத்தை கடந்துவிட்டதாக எய்ம்ஸ் மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் சஞ்சய் ராய் கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை வந்தபோது, பல மாநிலங்களில் தொற்று கட்டுக்குள் வந்துவிட்டது. ஆனால் கேரளாவில் மட்டும் தொற்று குறையாமல் அதிகரிக்க தொடங்கியது.
இதனால் கேரளாவை ஒட்டியுள்ள தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர். கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு கட்டாயம் கொரோனா சான்று மற்றும் தடுப்பூசி போடப்பட்டதா என்பனவற்றை சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்த பின்னரே மாநிலத்திற்குள் அனுமதித்தனர்.
இதனிடையே கேரளாவில் தொற்றை கட்டுப்படுத்த மத்திய குழு அங்கு சென்று ஆய்வு ஒன்றை நடத்தியது. கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று கேரள அரசுக்கு மத்திய குழு பரிந்துரைத்தது.
இந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உச்சத்தை கடந்து விட்டது என எய்ம்ஸ் மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் சஞ்சய் ராய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், செப்டம்பர் முதல் வாரத்தில் ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் கேரளாவில் பதிவாகியிருந்தது. அதன் பின்னர் பாதிப்புகள் கணிசமாக குறையத்தொடங்கியது.
வடகிழக்கு மாநிலங்களை போன்று கேரளாவில் தொற்றின் பாதிப்பு குறைகிறது. கடந்த 23 மாதங்களில் பரவிய தொற்றின் தாக்கத்தை பார்க்கும்போது கேரளா அதன் உச்சத்தை கடந்துவிட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக அடுத்த 2 வாரங்களில் தொற்றின் எண்ணிக்கை படிப்படியாக குறையும். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Hindu Tamil