மஹாராஷ்டிராவில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்காளதேசத்தினர் கைது !

மகாராஷ்டிரா மாநிலத்தில் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவணங்களின்றி தங்கியிருப்பதை அறிந்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் வெளிநாட்டினர் உரிய ஆவணங்களின்றி தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தானே குற்றப்பிரிவு போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
காவல் துறையின் தீவிர வலைவீச்சில், பிவாண்டி தாலுகாவுக்கு உட்பட்ட சாரவல்லி என்ற கிராமத்தில் நடத்திய சோதனையின் போது வெளிநாட்டினர் 9 பேர் தங்கி இருந்ததை கண்டுபிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் 9 பேரும் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது காவல் துறைக்கு தெரிய வந்தது. அவர்கள் எந்த வித ஆவணங்கள் இன்றி தங்கியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 9 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் மகாராஷ்டிரா தானே பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.