ஆட்டோ குண்டு வெடிப்புக்கு முன்னதாக ஷிமோகாவில் ஒத்திகை பார்த்த ஷரீக் - என்.ஐ.ஏ விசாரணையில் ஷாக்!
By : Kathir Webdesk
கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே ஆட்டோவில் குண்டு வெடித்த சம்பவத்துக்கு முன்பாக முகமது ஷரீக் தனது நண்பர்கள் 2 பேருடன் ஷிமோகாவில் குண்டை வெடித்துப் பார்த்து, ஒத்திகையில் ஈடுபட்டது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.
மங்களூரு அருகே ஆட்டோவில் திடீரென குக்கர் குண்டு வெடித்ததில், ஆட்டோ ஓட்டுநர், அதில் பயணித்த முகமது ஷரீக்(24) ஆகியோர் பலத்த காயமடைந்தார்.
விசாரணையில், முகமது ஷரீக், உதகை, கோவையைச் சேர்ந்தவர்களின் ஆதார் எண் மற்றும் முகவரியைப் பயன்படுத்தி, சிம் கார்டு வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
ஐ.எஸ். போன்ற சர்வதேச தீவிரவாத அமைப்புகளின் ஆதரவாளரான இவர், அப்துல் மதீல் டாஹா என்ற பெயரில் சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வந்துள்ளார்.
முகமது ஷரீக்குக்கு கர்நாடகா மட்டுமின்றி, கேரளா, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுடனும் தொடர்பு இருந்திருக்கிறது.
வெடிகுண்டு தயாரிப்பது தொடர்பாக இணையத்தில் தகவல்களை தேடிப் படித்துள்ளார். டெலிகிராம் சமூக வலைதளத்தில் கிடைத்த தகவல் மூலம் குக்கர் வெடிகுண்டைத் தயாரித்திருக்கிறார்.
மங்களூருவில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபடுவதற்கு முன்னர் தனது நண்பர்கள் யாசின், மாஸ் ஆகியோருடன், ஷிமோகாவில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் குண்டை வெடித்து சோதனை செய்துள்ளார். மேலும், ஐ.எஸ். அமைப்பினரைப் போல உடையணிந்து, வெடிக்கப் போகும் குண்டுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.
முகமது ஷரீக் கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்திருக்கிறார். கோவையில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவத்துக்கும், மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு சம்பவத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்று என்ஐஏ சந்தேகிக்கிறது.
Input From: Indian Express