குறைந்த பட்ச ஆதார விலை தொடரும்.. பிரதமர் மோடி திட்டவட்டம்.!
குறைந்த பட்ச ஆதார விலை தொடரும்.. பிரதமர் மோடி திட்டவட்டம்.!

வேளாண் சட்டங்களால், விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும் எனவும், இந்த சட்டத்தை கொண்டு வந்ததற்காக யாரும் நன்றி தெரிவிக்க வேண்டியதில்லை. நலமுடன் வாழ்ந்தால் போதும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும், குறைந்த பட்ச ஆதார விலையும் தொடரும் என விவசாயிகளுக்கு உறுதியளித்துள்ளார்.
டெல்லியில் கடந்த 3 வாரங்களை கடந்தும் விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது. அவர்களுடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இருந்த போதிலும் விவசாயிகள் உடன்படவில்லை. மீண்டும் விவசாயிகளிடம் மத்திய அரசு பேச்சு நடத்தும் என விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநில விவசாயிகள் மாநாட்டில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது: விவசாயிகள் பிரச்னையில் இரட்டை வேடம் போடும் காங்கிரஸ் தற்போது முதலை கண்ணீர் வடித்து வருகிறது. விவசாயிகள் மீதான சுமை என்பது ஒவ்வொரு இந்திய மக்களின் மீதான சுமையாகும். குளிர்பதன கிடங்கு வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம்.
விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க விரும்புகிறோம். வர்த்தகர்கள், கிடங்கு வசதியை ஏற்படுத்த வேண்டும் என கேட்டு கொள்கிறேன். விவசாயிகள், நவீன தொழில்நுட்ப வசதிகளை பெற முடியும்.
வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும். வியாபாரிகளையும், விவசாயிகளையும் இணைப்பவையாக உள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் விவசாயிகளின் பிரச்னையை தீர்த்து வைத்துள்ளோம். கடந்த சில நாட்களாக வேளாண் சட்டங்கள் குறித்து விளக்கி வருகிறோம். வேளாண் சட்டங்கள் குறித்து விவாதங்கள் நடந்துள்ளன.
வேளாண் சட்டங்கள் கொண்டு வந்ததற்கு நன்றி தெரிவிக்க வேண்டாம். நலமுடன் வாழ்ந்தால் போதும் விவசாயி தற்கொலை செய்வதை வேளாண் சட்டம் முற்றிலும் தடுக்கும். விவசாயிகளை வாக்கு வங்கியாக மட்டும் எதிர்க்கட்சிகள் பயன்படுத்தி வருகிறது. அவர்களின் நலனை பற்றி சிந்தித்தது இல்லை. ஏமாற்ற மட்டுமே செய்தனர். எதிர்க்கட்சிகளால் வாக்குறுதி மட்டுமே அளிக்க முடியும். அதனை நிறைவேற்ற ஆளுங்கட்சியால் மட்டுமே முடியும். இவ்வாறு அவர் பேசினார்.