அரசுக்கு பல நூறு கோடி மிச்சம் - நிலக்கரி சுரங்கத்தில் பயன்படுத்தப்படும் டம்பர் வாகனங்களில் டீசலுக்கு பதில் திரவ இயற்கை எரிவாயு !
Ministry of Coal starts pilot project to replace use of diesel with LNG in dumpers
By : Muruganandham
கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதற்காக, மத்திய அமைச்சகத்தின் கோல் இந்தியா நிறுவனம் , டம்பர் வாகனங்களில் டீசலுக்கு பதில் திரவ இயற்கை எரிவாயு(எல்என்ஜி) பயன்படுத்தும் பரிசோதனை நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
உலகின் மிகப் பெரிய நிலக்கரி சுரங்க நிறுவனமான சிஐஎல், நிலக்கரியை டம்பர் வாகனங்களில் எடுத்துச் செல்வதற்கு ஆண்டுக்கு 4 லட்சம் கிலோ லிட்டர் டீசல் பயன்படுத்துகிறது. இதற்கு ரூ.3,500 கோடி செலவாகிறது.
இதற்காக சிஐஎல் நிறுவனம் கெயில் இந்தியா நிறுவனம் மற்றும் பிஇஎம்எல் நிறுவனத்துடன் இணைந்து, சோதனை முயற்சியாக இரண்டு 100 டன் டம்பர் வாகனங்களில் எல்என்ஜி பயன்படுத்தும் உபகரணங்களை பொருத்தும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
இதற்காக கெயில் மற்றும் பிஇஎம்எல் நிறுவனத்துடன் சிஐஎல் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. எல்என்ஜி உபகரணம் டம்பர் வாகனங்களில் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு விட்டால், இவற்றை டீசல் மற்றும் எல்என்ஜி ஆகிய இரண்டிலும் இயக்க முடியும். எல்என்ஜி பயன்படுத்தும்போது மலிவானதாகவும், சுத்தமான எரிபொருளாகவும் இருக்கும்.
இந்த நடவடிக்கை மிகப் பெரிய மாற்றமாக இருக்கும். சிஐஎல் நிறுவனத்தில் 2,500 டம்பர்கள் உள்ளன. இவற்றில் எல்என்ஜி பயன்படுத்தினால், டீசல் பயன்பாடு 30 சதவீதம் முதல் 40 சதவீதம் குறையும். எரிபொருள் செலவும் 15 சதவீதம் குறையும். சிஐஎல் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி மிச்சமாகும். இந்த நடவடிக்கையால் கார்பன் வெளியேற்றமும் குறையும்.