எகிப்தில் பன்னாட்டுப் போர் பயிற்சி - இந்தியா முதல் முறையாக பங்கேற்பு
எகிப்தில் நடைபெறும் பன்னாட்டு போர் பயிற்சியில் இந்தியா முதல் முறையாக பங்கேற்றுள்ளது.
By : Karthiga
இந்தியா-எகிப்து இடையிலான பாதுகாப்பு உறவுகள் கடந்த சில ஆண்டுகளாக மேம்பட்டு வருகின்றன. பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு நாடுகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கடந்த ஜனவரி மாதம் இந்தியா- எகிப்து ராணுவம் முதல் முறையாக கூட்டுப் போர் பயிற்சி நடத்தியது. ராஜஸ்தான் மாநிலத்தில் 14 நாட்களுக்கு இந்த கூட்டு பயிற்சி நடந்தது. இந்த நிலையில் எகிப்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பன்னாட்டுப் போர் பயிற்சி இந்தியா முதல் முறையாக பங்கேற்றுள்ளது. 'ப்ரைட் ஸ்டார்' என்ற பெயரில் நடைபெறும் இந்த கூட்டுப் போர் பயிற்சி எகிப்து தலைநகர் கேரோவில் நேற்று தொடங்கியது.
அமெரிக்கா, சவுதி அரேபியா, கத்தார் மற்றும் கிரீஸ் உள்பட பல நாடுகளின் ராணுவங்களுடன் இந்திய விமானப்படையும் இந்த பயிற்சியில் பங்கேற்றுள்ளது . இதையொட்டி இந்திய விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானங்களும் சிறப்பு படை வீரர்களும் குழுவும் எகிப்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இது குறித்து இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்த கூட்டுபயிற்சியில் இந்திய விமானப்படையின் சார்பில் 5 'மிக்-29' விமானங்கள், 2' ஐ.எல்-78' விமானங்கள், 2' சி-130 'விமானங்கள் மற்றும் இரண்டு 'சி -70 ' விமானங்கள் பங்கேற்றுள்ளன. இந்திய விமானப்படையின் கருடா சிறப்பு படையை சேர்ந்த வீரர்களும் பல்வேறு படை பிரிவுகளைச் சேர்ந்த வீரர்களும் பங்கேற்றுள்ளனர். இவர்களுடன் இந்திய ராணுவத்தை சேர்ந்த சுமார் 150 வீரர்களும் பயிற்சியில் பங்கேற்றுள்ளனர் .
SOURCE: DAILY THANTHI