துருக்கியில் இந்திய பேரிடர் மீட்புப் படையினரின் பணிகளை பாராட்டிய உலக நாடுகள்: மத்திய அமைச்சர் பெருமிதம்!
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் மேற்கொள்ளப் பட்டுவரும் இந்திய பேரிடர் மீட்புப்படையினரின் மீட்புப் பணிகள் உலக நாடுகளின் பாராட்டைப் பெற்றுள்ளன
By : Bharathi Latha
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் மேற்கொள்ளப் பட்டுவரும், இந்திய பேரிடர் மீட்புப்படையினரின் மீட்புப் பணிகள், உலக நாடுகளின் பாராட்டைப் பெற்றிருப்பதாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார். புதுதில்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு காலத்தில் உலக நாடுகளின் உதவியை இந்தியா நாடியிருந்த நிலை மாறி, தற்போது உலக நாடுகளுக்கு இந்தியாவின் ஒத்துழைப்பை நீட்டிக்கும் நிலை உருவாகியிருப்பதாகவும், இது இந்தியா அதிகாரம் மிக்கதாகத் திகழ்வதை பிரதிபலிப்பதாகவும் கூறினார்.
இது, போருக்கான தருணம் அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியது, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்ததை நினைவு கூர்ந்த அனுராக் சிங் தாக்கூர், தற்போது நாம் உலக நாடுகளின் உதவியை நாடும் நிலையில் இல்லை, மாறாக முதலீட்டுக்கான வாய்ப்புகள் இந்தியாவில் குவிந்திருப்பதாக உலக நாடுகள் கருதுவதாகத் தெரிவித்தார். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், உலக நாடுகளுக்கு உதவுவதற்கு மத்திய அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
சிரியா, லிபியா, நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் நிலநடுக்க பாதிப்பின் போது இந்தியா ஆதரவுக்கரம் நீட்டி உதவியதைக் குறிப்பிட்டார். இதன்மூலம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, உலக நாடுகளை உள்ளடக்கிய 'உலகம் ஒரு குடும்பம்' என்பதற்கு உதாரணமாக திகழ்வதாகவும் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்தார்.
Input & Image courtesy: News