தமிழகம் உட்பட 4 மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை: மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அவசர கடிதம்.!
வடக்கு அந்தமான் கடலில் நாளை ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது. இது வருகின்ற 24ம் தேதி புயலாக வலுவடைந்து வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

By : Thangavelu
வடக்கு அந்தமான் கடலில் நாளை ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது. இது வருகின்ற 24ம் தேதி புயலாக வலுவடைந்து வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வருகின்ற 26ம் தேதி காலையில் ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் இடையே புயல் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.
அதில், ஆந்திரா, ஒடிசா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் உள்ள கடலோர மாவட்டங்களில் சுகாதார முன்னெச்சரிக்கை உடனடியாக மேற்கொள்ளும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே போன்று அந்தமான் தீவுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது பற்றி 4 மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள நிர்வாகிகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் அனுப்பி உள்ளார். புயல் பாதிப்பு நடைபெறும் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் குடிநீர் மற்றும் மின்சாரம் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
மேலும், புயல் பாதிக்கும் பகுதிகளில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் இருந்து அனைத்து நோயாளிகளையும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டும் என மத்திய அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
