கனடா நாட்டினருக்கு விசா வழங்கும் பணியை நிறுத்தி வைத்த இந்திய தூதரகம்!
By : Sushmitha
காலிஸ்தான் பயங்கரவாதியின் கொலை விவகாரத்தில் கனடா தூதரை வெளியேற்றிய இந்தியா தற்போது, இந்தியா வருவதற்கான கனடா நாட்டினருக்கு வழங்கும் விசா சேவை பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு கனடாவில் காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரும் தீவிரவாதியுமான ஹர்தீப் சிங் நிஜார் சுட்டு கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைக்கும் இந்திய அரசாங்க முகவர்களுக்கும் தொடர் இருப்பதாக நம்பப்படுகிறது என்று இரண்டு தினங்களுக்கு முன்பு கூட்டப்பட்ட நாடாளுமன்ற கூட்டத்தில் கனடா பிரதமர் தெரிவித்தார். இதற்கு உடனடியாக பதில் அளித்த இந்தியா இந்த குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் உள்நோக்கம் கொண்டது என்றும் கூறி இந்தியாவிற்கான தூதரை இந்தியாவை விட்டு ஐந்து நாட்களுக்குள் வெளியேறும்படி இந்தியா உத்தரவிட்டது. இதனை அடுத்து தற்பொழுது இந்தியாவிற்கு வருகைபுரியும் கனடா நாட்டினருக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும், அதேபோன்று கனடாவிற்கு செல்லும் இந்தியர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தற்போது இந்தியாவிற்கு வருவதற்கான கனடா நாட்டினருக்கு விசா வழங்கும் பணியை செப்டம்பர் 21ஆம் தேதி முதல் அடுத்த உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Source - The Hindu & Dinamalar