கேரளாவில் நிபா வைரஸ் காரணமாக தீவிர கண்காணிப்பு !
கேரளாவில் தற்போது பரவிவரும் நிபா வைரஸ் காரணமாக தீவிர கண்காணிப்பில் சுகாதாரத் துறை குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
By : Bharathi Latha
கேரளாவில் கொரோனா வைரஸ்களுக்கு இடையே நிபா வைரஸ் தற்பொழுது அதிகரித்து வருகின்றது. ஏற்கனவே நிபா வைரஸுக்கு சிறுவன் பலியாகியுள்ள நிலையில், சிறுவனுடன் தொடர்பில் இருந்த 58 பேர் கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரளாவில் கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் நிபா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் 12வயது சிறுவன் உயிரிழப்பு கேரள மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக இந்த நிபா வைரஸ், பழம்தின்னி வவ்வால்களில் இருந்து பரவும். நிபா வைரஸ் உறுதியானதையடுத்து, அந்த சிறுவனுடன் கடந்த 10 நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கண்காணிக்கப்பட்டு, தேடப்பட்டு வருகின்றனர். அவர்களை தனிமைப்படுத்தும் பணியும் தற்போது விரைவாக நடந்து வருகிறது. சிறுவனுடன் தொடர்பில் இருந்த 58 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், "நிபா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது. இருப்பினும் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. அடுத்த இரண்டு வாரங்கள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நிபா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்த 58 பேர் கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும் முன்னெச்சரிக்கை காரணமாக தொடர்ந்து அவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த படுவதன் மூலமாக பாதிப்புகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும்" என்றும் அவர் கூறினார்.
Input & Image courtesy:The Hindu