7வது முறையாக பீகார் முதல்வராக பதவி ஏற்கும் நிதிஷ்குமார்.!
7வது முறையாக பீகார் முதல்வராக பதவி ஏற்கும் நிதிஷ்குமார்.!

By : Kathir Webdesk
பீகார் சட்டசபை தேர்தல் கடந்த அக்டோபர் 28ம் தேதி முதல் நவம்பர் 7ம் தேதி வரை கட்டங்களாக நடந்து முடிந்தது. கடந்த 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களை கைப்பற்றியது. பா.ஜ.க. 74, ஐக்கிய ஜனதா தளம் 43, பெரும்பான்மை பெற்றது. ஐக்கிய ஜனதா தளம் மிக குறைந்த தொகுதிகளில் வெற்றி பெற்ற போதிலும், தேர்தலுக்கு முன்பே பா.ஜ.க. கூறியது போல் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்பது என கூட்டணியின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒருமித்தமாக முடிவு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நிதிஷ் குமார் தொடர்ந்து 4வது முறையாக முதலமைச்சராக பதவியேற்கிறார். இவர் முதல் முறையாக 2000ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி முதலமைச்சராக பதவி ஏற்றார். ஆனால் 7 நாட்கள் மட்டுமே பதவியில் இருந்தார்.
இதன் பின்னர் 2வது முறையாக 2005 நவம்பர் 24ம் தேதி பதவி ஏற்றார். 5 ஆண்டு பதவி வகித்தார். 3வது முறையாக 2010 நவம்பர் 26ம் தேதி பதவி ஏற்றார். 4 ஆண்டுகள் பதவியில் இருந்தார்.
இதனை தொடர்ந்து, 4வது முறையாக 2015 பிப்ரவரி 22ம் தேதி பதவி ஏற்று அதே ஆண்டின் 2015 நவம்பர் 19 வரை பதவி வகித்தார். 5வது முறையாக 2015 நவம்பர் 20ம் தேதி பதவி ஏற்று 2017 ஜூலை 26 வரை பதவியில் இருந்தார். 6-வது முறையாக 2017 ஜூலை 26-ம் தேதி பதவி ஏற்று தற்போது வரை பதவி வகித்துள்ளார்.
முதல் முறை மட்டும் சமதா கட்சி சார்பிலும், மற்ற முறைகள் ஐக்கிய ஜனதாதளம் சார்பிலும் நிதிஷ்குமார் முதல்வராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், 7வது முறையாக மீண்டும் முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார். பீகாரின் 37வது முதல்வராக பதவி ஏற்கும் 69 வயது நிறைந்த நிதிஷ் குமார், 3 முறை முழு பதவி காலமும் நிறைவு செய்த பெருமையை கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
