Kathir News
Begin typing your search above and press return to search.

உலக சாலைகளில் ஓடப்போகும் ஓலாவின் ஸ்கூட்டர்கள்: தமிழகத்துக்கு கிடைக்கும் பலன்கள் என்ன.?

உலக சாலைகளில் ஓடப்போகும் ஓலாவின் ஸ்கூட்டர்கள்: தமிழகத்துக்கு கிடைக்கும் பலன்கள் என்ன.?

உலக சாலைகளில் ஓடப்போகும் ஓலாவின் ஸ்கூட்டர்கள்: தமிழகத்துக்கு கிடைக்கும் பலன்கள் என்ன.?

Rama SubbaiahBy : Rama Subbaiah

  |  18 Dec 2020 9:02 AM GMT

டாக்சி கார் சேவை செய்யும் பிரபல ஓலா நிறுவனம் உலகிலேயே மிகப்பெரிய மின்சார ஸ்கூட்டர் தயாரிக்கும் ஆலையை தமிழகத்தில் அமைக்க உள்ளது. ஓசூரில் 2354 கோடி ரூபாய் செலவில் அமைய உள்ள இந்த ஆலை மூலம் சுமார் பத்தாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஓலா நிறுவனம் இந்தியா முழுவதும் சிறப்பாக டாக்ஸி சேவை செய்து வரும் நிறுவனம். இன்று சென்னை போன்ற நகரங்களில் ஓலாவை நம்பிதான் கார் ஓட்டுனர்களின் வாழ்க்கை நகர்கிறது என்றே கூறபபடுகிறது.

அதே சமயம் கார் வாங்க வசதியிருந்தும் அதை பராமரிப்பது, இயக்குவது போன்ற நிலையில் இல்லாத நடுத்தரக்குடும்பங்களுக்கும், காரை அவசர காலங்களில் மட்டும் பயன்படுத்தும் நிலையில் உள்ளவர்களுக்கும் ஓலா நிறுவனத்தின் சேவை மிகப்பெரிய சேவையாக பார்க்கப்படுகிறது. ஓலாவின் சேவையை பயன்படுத்தி மக்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு டாக்ஸி மூலம் பாதுகாப்பாகவும் பயணிக்கிறார்கள்.

இந்த தொழிலில் தனது போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளிய ஓலா, தற்பொழுது உலகிலே மிகப்பெரிய மின்சார ஸ்கூட்டர் தயாரிக்கும் ஆலையை தமிழகத்தில் அமைக்க உள்ளது.

"விரைவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் தடம் பதிக்கும், ஓலா நிறுவனம் வருகிற 2021 ஜனவரி மாதத்தில் இந்தியாவில் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைக் களமிறக்கும்" என்கிற செய்தியும் சில மாதங்களுக்கு முன்பே வெளியானது.

அப்போது, ஆரம்ப காலகட்டத்தில் நெதர்லாந்தில் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்து, இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் என்றும் பின்னர் இந்தியாவிலேயே உற்பத்தி ஆலை அமைக்கப்படும் என்றும் ஓலா நிறுவனம் சார்பில் சொல்லப்பட்டிருந்தது.

இந்நிலையில் உலகிலேயே மிகப்பெரிய மின்சார ஸ்கூட்டர் தயாரிக்கும் ஆலையை தமிழகத்தில் அமைக்க உள்ளதாக ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அலுவலருமான பாவேஷ் அகர்வால், தமிழகத்தின் ஓசூரில் 2354 கோடி ரூபாய் செலவில் மின்சார ஸ்கூட்டர் தயாரிக்கும் ஆலை அமைக்கப்பட உள்ளது என்றார்.

இதற்காக தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாகவும், இந்த ஆலையில் ஆண்டுக்கு 20 லட்சம் ஸ்கூட்டர்கள் தயாரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச நாடுகளுக்கும் ஓலா நிறுவனம் ஸ்கூட்டர்களை ஏற்றுமதி செய்யும். அந்த வகையில், தமிழகத்தில் தயாரிக்கப்படும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்தியப் போக்குவரத்து சந்தையை மேம்படுத்தும். அது மட்டுமல்லாமல், ஐரோப்பியா, ஆசியா மற்றும் லத்தின் அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்" என்றார்.

சர்வதேச தொழில் நுட்பத்துடன் அமைக்கப்படும் இந்த ஆலையில், சர்வதேச தரத்திற்கு இணையான ஸ்கூட்டர்கள் உருவாக்கப்படும் என்றும், இதன் மூலம் பத்தாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த உற்பத்திசாலை உலகிலேயே மிகப்பெரிய மின்சார ஸ்கூட்டர் தயாரிக்கும் ஆலையாக அமையும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News