Kathir News
Begin typing your search above and press return to search.

தென் ஆப்பிரிக்காவில் இருந்து மாறுபட்ட கொரோனாவை எதிர்கொள்ள தயார் நிலையில் இந்தியா - மாநிலங்களுக்கு பறந்த உத்தரவு!

Omicron virus - Centre alerts states to be vigil and proactive

தென் ஆப்பிரிக்காவில் இருந்து மாறுபட்ட கொரோனாவை எதிர்கொள்ள தயார் நிலையில் இந்தியா - மாநிலங்களுக்கு பறந்த உத்தரவு!

MuruganandhamBy : Muruganandham

  |  29 Nov 2021 12:50 PM GMT

தென் ஆப்பிரிக்காவில், 'ஒமிக்ரான்' என்ற மாறுபட்ட கொரோனா வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்ற பி.1.1.529 என்ற மாறுபட்ட கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனா கவலையளிக்க கூடியது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்த புதிய வைரஸ் கண்டறியப்பட்ட நாடுகளை அபாய பிரிவு பட்டியலில் மத்திய அரசு வைத்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிவுறுத்தலில், அபாய பிரிவு பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகளிடம் கூடுதல் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். இந்த மாறுபட்ட கொரோனா வகை அச்சுறுத்தலாக உள்ளதால், இதை சமாளிக்க, கட்டுப்பாடு, கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்துதல், கொவிட் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். சர்வதேச பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

அனைத்து நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகள், குறிப்பாக அபாய பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிப்பது அவசியம். அதற்கேற்ப நாட்டில் பரிசோதனை வசதிகளை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். சர்வதேச விமானங்கள் மூலம் இந்தியா வரும் பயணிகளை மாநிலங்கள் தீவிரமாக பரிசோதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அபாய பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் கொரோனா பாதிப்பு உறுதியானால், அவர்களின் மாதிரிகளை 'இன்சாகாக்' பரிசோதனை மையங்களுக்கு முறையாக அனுப்ப வேண்டும்.

மாறுபட்ட கொரோனா வகை வைரஸ் பாதிப்பு அதிகரித்தால், விரிவான பரிசோதனை கட்டமைப்பை செயல்படுத்த வேண்டும். சில மாநிலங்களில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது. போதிய பரிசோதனை வசதி இல்லாவிட்டால், பாதிப்பின் உண்மையான அளவை கண்டறிவது சிரமம். அதனால் மாநிலங்கள் பரிசோதனை கட்டமைப்பை வலுப்படுத்தி, பரிசோதனை வழிகாட்டுதல்களை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.

சமீபத்தில் பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களை தொடர்ந்து கண்காணித்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பாதிப்பு உறுதியானால், கொரோனா வைரஸ் வகையை கண்டறிய அதன் மாதிரிகளை இன்சாகாக் பரிசோதனை கூடங்களுக்கு அனுப்ப வேண்டும். கொவிட் பாதிப்பை 5 சதவீதத்துக்கு குறைவாக இருக்கும்படி மாநிலங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். தொற்றை விரைவில் கண்டறிய ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்.மாநிலம் முழுவதும் மருத்துவமனை வசதிகளை போதிய அளவில் வைத்திருக்க வேண்டும்.

நாட்டில் கொரோனா வைரஸ் மாறுபாடுகளை கண்டறிய 'இன்சாகாக்' பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொவிட் தொற்று பற்றி தவறான தகவல்கள் மக்களிடையே பீதியை ஏற்படுத்துவதை பார்த்துள்ளோம். அதனால், ஆதாரபூர்வ தகவல்களை, மாநிலங்கள் செய்திகளாக வெளியிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News