இனி இந்தியாவில் தொடர்ச்சியாக பெட்ரோலே எரிபொருளாக இருக்கப்போவதில்லை! மத்திய அரசின் அசத்தல் மாற்று திட்டம்!
இனி இந்தியாவில் தொடர்ச்சியாக பெட்ரோலே எரிபொருளாக இருக்கப்போவதில்லை! மத்திய அரசின் அசத்தல் மாற்று திட்டம்!

By : Muruganandham M
எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு பொதுமக்களிடம் கருத்துகளை கோரி வருகிறது. வாகனங்களில் பெட்ரோலை பயன்படுத்துவதால் செலவு அதிகரிப்பதுடன், சுற்றுச்சூழல் மாசுபாடும் ஏற்படும் என்பதால் அதனைக் கட்டுப்படுத்த எத்தனாலைக் கலந்து எரிபொருளாக பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு ஆலோசனை தெரிவித்து உள்ளது.
கர்நாடகா எத்தனால் உற்பத்தியை பெரிய அளவில் மேற்கொள்ள முடியும் என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

நாடு ஏற்கனவே சர்க்கரை மற்றும் அரிசியை அதிகமாக உற்பத்தி செய்து வருவதாகவும், எத்தனால் உற்பத்தி செய்வதற்கான போதுமான அளவு ஆதாரம் கிடைக்கிறது என்றும் அவர் கூறினார். உபரியாக கிடைப்பவை எத்தனாலாக மாற்றப்படலாம். இது வாகனங்களுக்கு மாற்று எரிபொருளாக பயன்படுத்தப்படலாம். இது விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நாட்டிற்கான உள்நாட்டு எரிபொருட்களின் மூலமாகவும் இருக்கும் என்று அவர் கூறினார்.
வேளாண் விளைபொருட்களை எரிபொருளுடன் இணைப்பது விவசாயியின் வருமானத்தை அதிகரிக்க வழிவகுக்கும் என்று அமைச்சர் கூறினார். அண்மையில், சாலை அமைச்சகம் E20 எரிபொருளை ஏற்றுக்கொள்வதற்காக பொதுமக்களிடமிருந்து கருத்துக்களைக் கோரியுள்ளது. 20 சதவீத எத்தனால் கலவை பெட்ரோலை, வாகன எரிபொருளாக மாற்றினால், அதனால் உண்டாகும் புகை உமிழ்வு குறைவாக இருக்கும்.

இந்த அறிவிப்பு E20 இணக்கமான வாகனங்களை உருவாக்க உதவுகிறது. எத்தனால் மற்றும் பெட்ரோல் கலவையில் எத்தனால் சதவீதத்திற்கு வாகனத்தின் பொருந்தக்கூடிய தன்மை வாகன உற்பத்தியாளரால் வரையறுக்கப்படும்.
இ20 எனப் பெயரிடப்பட்ட இந்த எரிபொருளைப் பயன்படுத்துவதால் கார்பன் உமிழ்வைக் குறைக்கமுடியும் என்றும், எண்ணெய் இறக்குமதி குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.