600 மாவட்டங்களில் புதிய தீவிர சிகிச்சை தொடர்பான முன்னெடுப்பு - அடுத்த கட்டத்திற்கு நகரும் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டம்!
PM launches PM Ayushman Bharat Health Infrastructure Mission
By : Muruganandham
நாட்டின் சுகாதாரத் துறையில் உள்ள பல வகையான இடைவெளிகளைப் போக்குவதற்கு ஆயுஷ்மான் பாரத் சுகாதார அடிப்படைக் கட்டமைப்பு இயக்கம் 3 முக்கிய அம்சங்களைக் கொண்டிருக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
முதலாவது அம்சம் நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சைக்கு விரிவான வசதிகளை உருவாக்குவது தொடர்பானது. இதன்படி நோய்களை முன்கூட்டியே கண்டறியும் வசதிகளுடன் கிராமங்களிலும் நகரங்களிலும் சுகாதார மற்றும் உடல் ஆரோக்கிய மையங்கள் திறக்கப்பட உள்ளன. இந்த மையங்களில் கட்டணமின்றி மருத்துவ ஆலோசணை, கட்டணமின்றி பரிசோதனைகள், விலை இல்லாமல் மருந்து போன்ற வசதிகள் கிடைக்கும். கடுமையான உடல் நோய்க்கு 600 மாவட்டங்களில் புதிய தீவிர சிகிச்சை தொடர்பாக 35,000 படுக்கைகள் அதிகரிக்கப்படும், பரிந்துரை வசதிகள் 125 மாவட்டங்களில் அளிக்கப்படும்.
இந்தத் திட்டத்தின் இரண்டாவது அம்சம், நோய்களைக் கண்டறிவதற்கான பரிசோதனை வலைப்பின்னல் தொடர்புடையதாகும் என்று பிரதமர் கூறினார். இந்த இயக்கத்தின் கீழ் நோய்களைக் கண்டறியவும் கண்காணிப்பதற்கும் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதி உருவாக்கப்படும். நாட்டின் 730 மாவட்டங்கள் ஒருங்கிணைந்த பொது சுகாதார பரிசோதனைக் கூடங்களைப் பெற்றிருக்கும். 3 ஆயிரம் ஒன்றியங்கள் ஒன்றிய பொது சுகாதார அலகுகளைக் கொண்டிருக்கும். இவைத் தவிர நோய்க் கட்டுப்பாட்டுக்கான 5 மண்டல தேசிய மையங்கள், 20 பெருநகர அலகுகள், 15 உயிர்ப் பாதுகாப்பு நிலையிலான பரிசோதனைக் கூடங்கள் இந்த வலைப்பின்னலை மேலும் வலுப்படுத்தும் என்று பிரதமர் கூறினார்.
மூன்றாவது அம்சம், பெருந்தொற்றுகள் பற்றி ஆய்வு செய்யும் தற்போதுள்ள ஆராய்ச்சி நிறுவனங்கள் விரிவாக்கம் செய்யப்படுவதாகும் என்று பிரதமர் கூறினார். தற்போது செயல்படும் 80 வைரஸ் நோய் கண்டறிதல் மற்றும் ஆய்வுக்கூடங்கள் வலுப்படுத்தப்படும், உயிர்ப் பாதுகாப்பு நிலையிலான 15 பரிசோதனைக் கூடங்கள் செயல்பாட்டுக்கு வரும், வைரஸ் தொடர்பான ஆய்வுக்கு 4 புதிய தேசிய கல்விக் கழகங்களும், உள்ளூர் முதல் உலகம் வரையிலான பல துறை ஒத்துழைப்புக்கும் மனிதர்கள் விலங்குகள் தாவரங்கள் தொடர்பான சுகாதார ஆய்வுக்கு தேசிய கல்விக் கழகமும் அமைக்கப்பட உள்ளது. இந்த வலைப்பின்னலில் தெற்காசியாவுக்கான உலக சுகாதார நிறுவனத்தின் பிராந்திய ஆராய்ச்சி அமைப்பும் வலுப்படுத்தப்படும். "பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார அடிப்படைக் கட்டமைப்பு இயக்கத்தின் மூலம் சிகிச்சை முதல் முக்கியமான ஆராய்ச்சி வரையிலான சேவைகளுக்கு ஒட்டு மொத்த சூழல் நாட்டின் அனைத்து இடங்களிலும் உருவாக்கப்படும் என்பது இதன் பொருளாகும்" என்று பிரதமர் கூறினார்.