ஒரு கோடி சமையல் எரிவாயு இணைப்பு - பிரம்மிக்க வைக்கும் பிரதமரின் உஜ்வாலா திட்டம் : அபார சாதனையால் இன்று தொடங்கும் அடுத்த வெர்ஷன் !
During Ujjwala 1.0 launched in 2016, a target was set to provide LPG connections to 5 crore women members of BPL households.
By : Muruganandham
உத்தரப் பிரதேசத்தின் மஹோபாவில் சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்கி, உஜ்வாலா 2.0 திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 10) பிற்பகல் 12:30 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக அறிமுகப்படுத்துகிறார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட உஜ்வாலா 1.0 திட்டம், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 5 கோடி பெண் உறுப்பினர்களுக்கு சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்க இலக்கு நிர்ணயித்தது. இதையடுத்து ஏப்ரல் 2018-இல், கூடுதலாக ஏழு பிரிவுகளைச் சேர்ந்த பெண்களுக்கும் இந்தத் திட்டத்தில் பலன்கள் நீட்டிக்கப்பட்டது. மேலும், திட்டத்தின் இலக்கு 8 கோடி சமையல் எரிவாயு இணைப்புகளாக மாற்றியமைக்கப்பட்டது. இந்த இலக்கு வரையறுக்கப்பட்ட காலத்திற்கு 7 மாதங்கள் முன்பே, ஆகஸ்ட் 2019-இல் எட்டப்பட்டது.
நிதியாண்டு 21-22-க்கான நிதிநிலை அறிக்கையில், பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் முதற்கட்டத்தில் கொண்டுவரப்படாத குறைந்த வருமானம் உடைய குடும்பங்களுக்கு வைப்புத்தொகை இல்லாமல் கூடுதலாக ஒரு கோடி சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்க உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ளது.
வைப்புத்தொகை இல்லாத சமையல் எரிவாயு இணைப்புடன், பயனாளிகளுக்கு முதல் மறு நிரப்புதல் மற்றும் சூடேற்றும் தட்டும் உஜ்வாலா 2.0 திட்டத்தில் இலவசமாக வழங்கப்படும். மேலும், இதில் சேர்வதற்கான நடைமுறைகளுக்கு குறைந்தபட்ச காகித பயன்பாடே தேவைப்படும்.
உஜ்வாலா 2.0 திட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சேர்வதற்கு ரேஷன் அட்டைகள் அல்லது முகவரி ஆவணங்களை சமர்ப்பிக்கத் தேவையில்லை. 'குடும்ப உறுதி ஆவணம்' மற்றும் 'முகவரி ஆதாரத்திற்கு' சுய வாக்குமூலமே போதுமானது. உலகளாவிய சமையல் எரிவாயு இணைப்புகளுக்கான அணுகலை வழங்கும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை அடைய உஜ்வாலா 2.0 திட்டம் உதவிகரமாக இருக்கும்.