சர்வதேச வர்த்தகத்திற்கு முக்கிய அங்கமாக விளங்குவது கடல்: ஐ.நாவில் பிரதமர் உரை !
கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்ய 5 அம்ச திட்டத்தை முன்மொழிந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.
By : Bharathi Latha
இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம், வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக நடைபெற்றது. கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் அது தொடர்பான சர்வதேச ஒத்துழைப்பு குறித்து விவாதமும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், கடல் என்பது அனைத்து நாடுகள் மத்தியிலும் பகிரப்பட்ட ஒன்று. எனவே கடல் வழித்தடங்கள் தான் சர்வதேச வர்த்தகத்தின் உயிர்நாடி என்று குறிப்பிட்டார்.
உலகத்தின் எதிர்காலத்திற்குக் கடல் போக்குவரத்து முக்கியமானது. ஆனால் பல முனைகளில் சவால்களைக் கடல் எதிர்கொள்கிறது. பல்வேறு நாடுகளுக்கு இடையே கடல்சார் பிரச்சினைகள் உள்ளன. இது மட்டுமின்றி காலநிலை மாற்றமும் முக்கியமான ஒன்றாக உருவெடுத்துள்ளது என்றார். சர்வதேச நாடுகளுக்கு இடையே கடல்சார் ஒத்துழைப்பை அதிகரிக்க நடவடிக்கை தேவை என்றும், தனது உரையில் ஐந்து அம்ச திட்டத்தையும் முன்மொழிந்துள்ளார். மேலும், இது போன்ற திட்டத்தை எந்த ஒரு நாடும் தனியாக முன்னெடுக்க முடியாது. அதற்கு நம் அனைவரது கூட்டு முயற்சிகளும் தேவை என்று ஐ. நா பாதுகாப்பு கவுன்சிலில் அவர் குறிப்பிட்டார்.
ஐந்து அம்ச திட்டத்தை முன் வைத்துப் பேசிய பிரதமர் மோடி, "கடல் வர்த்தகத்தைப் பொறுத்தே சர்வதேச வணிகம் அமைந்துள்ளது. கடல் வர்த்தகத்தில் இருக்கும் பிரச்சினைகள் உலக பொருளாதாரத்தைப் பாதிக்கக் கூடியது. கடல்சார் வர்த்தகம் என்பது எப்போதுமே இந்தியாவின் நாகரிக நெறிமுறையின் ஒரு பகுதியாக உள்ளது. எனவே, கடல் வர்த்தகத்திற்கான தடைகளை அகற்றுதல் இதில் மிகவும் முக்கியமான ஒன்று. கடைசியாகப் பொறுப்புள்ள கடல் உள்கட்டமைப்பை ஊக்குவிக்க வேண்டும். அதாவது கடல் வர்த்தகத்தை அதிகரிக்க முறையான உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டியது அவசியம் என்று பிரதமர் மோடி பேசினார்.
Image courtesy: india today