ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து பப்ஜி விளையாடியதால் நேர்ந்த துயரம்!
By : Dhivakar
ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து பப்ஜி விளையாடிய அண்ணன்-தம்பி இருவர் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தது ராஜஸ்தானில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளாக இளைஞர்களையும், சிறுவர்களையும் அதிகம் கவர்ந்த மொபைல் கேம் எது என்று கேட்டால் அது பப்ஜி என்று அடித்துக் கூறலாம். அந்த அளவிற்கு பப்ஜி மொபைல் விளையாட்டில் இளைஞர்களும், சிறுவர்களும் அடிமையாகியுள்ளனர். விளையாட்டு ஆர்வம் மிகுதியால் தன்னுணர்வு மறந்து விளையாட்டில் ஆழ்ந்து போவதால் பல தருணங்களில் விளையாடுபவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.
அந்தவகையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே, ஒரு கிராமத்தில் அண்ணன் தம்பி இருவரான லோகேஷ் மற்றும் ராகுல் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து தீவிரமாக பப்ஜி விளையாடி உள்ளனர். தண்டவாளத்தில் ரயில் வருவது கூட தெரியாமல் தீவிரமாக விளையாட்டில் மூழ்கிய லோகேஷ் மற்றும் ராகுல், ரயில் மோதி தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர்.
இச்சம்பவம் ராஜஸ்தான் முழுவதும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பப்ஜி விளையாடுவது குறித்து ஒரு மாபெரும் விழிப்புணர்வை இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.