பா.ஜ.க. ஆட்சியில் முஸ்லீம் பெண்களுக்கு பாதுகாப்பு: கான்பூரில் பிரதமர் மோடி பேச்சு!
By : Thangavelu
உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தற்போது இரண்டு கட்டங்கள் தேர்தல் முடிந்துள்ள நிலையில் இன்னும் 5 கட்ட தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. மார்ச் 7ம் தேதி கடைசி தேர்தல் ஆகும். இதனால் அரசியல் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், கான்பூரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது: உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியின் கீழ் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கின்றனர். மாநிலத்தில் பள்ளி, கல்லூரி செல்லும் முஸ்லீம் பெண்களின் எண்ணிக்கை மிக அதிகமாகும். அது மட்டுமின்றி முத்தலாக் தடை சட்டத்தினால் முஸ்லீம் பெண்களின் வாழ்க்கை மிகவும் மேம்பட்டுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டுக்கு முன்பு உத்தரபிரதேச மாநிலத்தில் பல லட்சம் போலி ரேஷன் கார்டுகளை உருவாக்கினர். இதனை நமது பாஜக ஆட்சியில் தடுத்து நிறுத்தியது. இன்று கோடிக்கணக்கான மக்கள் இலவசமாக ரேஷன் பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். எனவே எனது ஏழை சகோதரிகளின் அடுப்பு ஒருபோதும் அணைக்கபடாது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Source: Daily Thanthi
Image Courtesy: ANI