குதுப்மினாரில் சிலை வைத்து இந்துக்கள் வழிபட வழக்கு: மனுவை தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதிமன்றம்!
குதுப்மினார் உள்ளே அமைந்திருக்கும் மசூதியில் சிலை வைத்து இந்துக்கள் வழிபடுவதற்கு உரிமை இருப்பதாக கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
By : Thangavelu
குதுப்மினார் உள்ளே அமைந்திருக்கும் மசூதியில் சிலை வைத்து இந்துக்கள் வழிபடுவதற்கு உரிமை இருப்பதாக கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் மிகவும் சிறப்பு வாய்ந்த சுற்றுலா தலமாக குதுப்மினார் விளங்கி வருகிறது. இதனை காண்பதற்காக உலக முழுவதிலும் இருந்தும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை புரிவது வழக்கம். குதுப்மினார் மத்திய அரசின் இந்திய தொல்பொருள் ஆய்வகத்தின் கீழ் உள்ளது. இதன் நுழைவு வாயிலில் 'கவ்வத்தூல் இஸ்லாம்' என்ற பெயரில் மசூதி ஒன்றும் அமைந்துள்ளது. இதில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தியும் வருகின்றனர்.
இந்நிலையில், முஸ்லிம்களை போன்று இந்துக்களும் மசூதியில் சிலை வைத்து வணங்க வேண்டும் என்றும் இந்து மடத்தின் தீர்த்தங்கர் ரிஷப் தேவ் என்பவர் கடந்த 2020ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில் முஸ்லிம்களை போன்று இந்துக்களும் குதுப்மினார் மசூதியில் சிலை வைத்து பூஜிக்க உரிமை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கான காரணமாக டெல்லி சுல்தான் முகம்மது கோரியால், குதுப்மினார் வளாகத்தில் ஜெயின் மற்றும் இந்து கோயில்களின் இடிபாடுகளின் மீது மசூதி கட்டியதாக கூறியிருந்தார். அந்த மனுவில் மத்திய கலாச்சாரத்துறை மற்றும் இந்திய தொல்பொருள் ஆய்வகத்தினர் பிரதிவாதிகளாகவும் சேர்க்கப்பட்டனர். இந்த மனுவுக்கு எதிராக டெல்லியில் செயல்பட்டு வரும் பொது அமைப்பான நீதிக்கான சட்ட நடவடிக்கை எனும் அறக்கட்டளை மனு அளித்திருந்தது. அவரது மனுவில் மத்திய அரசின் 1991ம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டம் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.
அதாவது முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவால் சுதந்திரத்திற்கு முன்பிருந்து நடைபெற்ற அயோத்தி பாபர் மசூதி, ராமர் கோயில் மீதான வழக்கால் இயற்றப்பட்டது. அதன்படி பிற மத வழிப்பாட்டுத்தலங்கள் சுதந்திரத்திற்கு பின்னர் இருந்த நிலையே தொடரும் எனவும் அதில் மாற்றங்கள் செய்யவோ, பிறமதத்தினர் உரிமை கோரவோ முடியாது என குறிப்பிட்டிந்தார்.
மேலும், கடந்த 800 ஆண்டுகளாக குதுப்மினாரில் முஸ்லிம்கள் தவிர மற்ற மதத்தினர் வழிபட்டது இல்லை எனவும் கூறியிருந்தார். எனவே மனுவை தள்ளுபடி செய்யவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இரண்டு தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் தீர்த்தங்கர் ரிஷப் தேவ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Source: Hindu Tamil
Image Courtesy:Ethanthi