மோடி தலைமையில் வெற்றிகரமாக நிறைவடைந்த ஜி-20 மாநாடு : அடுத்த தலைமை பொறுப்பு பிரேசிலிடம் ஒப்படைப்பு!
உலகின் அதிகாரம் மிக்க அமைப்புகளில் ஒன்றான ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
By : Karthiga
பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்தது.இந்த அமைப்பின் அடுத்த ஆண்டுக்கான தலைவர் பொறுப்பை பிரேசில் அதிபர் லூயிஸ் லுலா டாசில்வாவிடம் பாரம்பரிய முறைப்படி பிரதமர் ஒப்படைத்தார். அப்போது பிரதமர் மோடி கூறுகையில், ஜி-20 தலைவர் பதவியை பிரேசிலுக்கு இந்தியா வழங்குகிறது. அர்ப்பணிப்பு மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் அவர்கள் இந்த அமைப்பை வழி நடத்துவார்கள் .
மேலும் உலகளாவிய ஒற்றுமை மற்றும் செழிப்பு ஆகிவற்றை மேம்படுத்துவார்கள் என்பதில் எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது என நம்பிக்கை தெரிவித்தார். பிரதமர் மோடியிடம் இருந்து தலைவர் பொறுப்பை பெற்றுக்கொண்ட பிரேசில் அதிபர் லூயிஸ் லுலா டாசில்வா,' மோதலுக்கு பதிலாக அமைதியும் ஒத்துழைப்புமே நமக்கு தேவை' என தெரிவித்தார்.
பிரிவினையை தூண்டுவதில் ஜி20 கூட்டமைப்பு ஆர்வம் காட்டவில்லை என கூறியவர் ஒன்று பட்ட நடவடிக்கை மூலம் மட்டுமே சவால்களை எதிர்கொள்ள முடியும் என்று உறுதிபட தெரிவித்தார். அதிகாரமிக்க இந்த அமைப்பின் தலைவர் பதவியை டிசம்பர் 1ஆம் தேதி முதல் பிரேசில் நாடு முறைப்படி அலங்கரிக்கும். அத்துடன் அடுத்த உச்சி மாநாடு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் அடுத்த ஆண்டு நவம்பர் இறுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
SOURCE :DAILY THANTHI