என்னை கொன்று விடுங்கள்: அனைத்து பிரச்சனைகளும் முடிந்துவிடும் - புலம்பும் ஸ்வப்னா சுரேஷ்
By : Thangavelu
கேரளாவை மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டையும் தங்கக் கடத்தல் வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கும் தொடர்பு இருப்பதாக ஸ்வப்னா சுரேஷ் கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து முதலமைச்சர் பினராயி விஜயனை பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு மத்தியில் தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் தரப்பில் வழக்கறிஞர் கிருஷ்ணராஜ் என்பவர் வாதாடி வருகிறார். மேலும், கேரள அரசு போக்குவரத்து கழக பேருந்து ஓட்டுனர் ஒருவரை விமர்சனம் செய்து பேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இது தொடர்பாக வழக்கறிஞர் கிருஷ்ணராஜ் மீது ஜாமீனில் வெளியே வரமுடியாத வகையில் கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் மேலும் இந்த வழக்கில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், பாலக்காட்டில் உள்ள தன்னுடைய வீட்டில் ஸ்வப்னா சுரேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட அனைவரின் மீதும் நான் ரகசிய வாக்குமூலத்தில் அளித்திருக்கும் புகாரில் எந்த சூழ்நிலையிலும் பின்வாங்க மாட்டேன். என்னுடன் தொடர்பில் இருப்பவர்களை குறிவைத்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி எனது வழக்கறிஞர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக என்னை கொன்று விடுங்கள், அப்படி நடைபெற்றால் அனைத்து உண்மைகளும் புதைந்துவிடும் என்று கூறினார்.
Source, Image Courtesy: Maalaimalar