இந்திய பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதித்தனர் தலிபான்கள் !
Breaking News.
By : G Pradeep
ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கும், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கும் தடை விதித்துள்ளனர்
இதுதொடர்பாக இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பின் டைரக்டர் ஜெனரல் அஜய் ஷகாய் கூறியதாவது: இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு சர்க்கரை, தேயிலை, காபி, மசாலா பொருட்கள், துணி வகைகள், தொழில்நுட்ப சாதனங்கள் போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. ஆப்கானிஸ்தானில் இருந்து பழ வகை உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டது. குறிப்பாக உலர் பழங்கள் ஆப்கானிஸ்தானில் இருந்துதான் இந்தியாவுக்கு வந்தன. இப்போது தலிபான்கள் இந்தியாவுக்கான ஏற்றுமதி, இறக்குமதிக்கு தடை விதித்து இருக்கிறார்கள்.
ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு சாலை மார்க்கமாக பொருட்கள் வருவது வழக்கம். கண்டெய்னர்களில் இவை அனுப்பப்படும். இந்தியாவுக்கு வரும் இந்த பொருட்களின் வாகனத்தை தலிபான்கள் தடுத்து விட்டனர். எனவே, அங்கிருந்து இனி பொருட்கள் வருவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது. துபாய் வழியாகவும் இந்தியாவுக்கு பொருட்கள் வந்தன. அதுவும் தடுக்கப்பட்டு உள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அதே போல ரூ.3,800 கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அவை தடைப்பட்டுள்ளது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் உலர் பழங்களில் 80 சதவீதம் ஆப்கானிஸ்தானில் இருந்துதான் வந்தது. தலிபான்களின் தடையால் இனி அவை அங்கிருந்து வராது. எனவே, இவற்றின் விலை அதிகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றியவுடன் இந்திய தூதரகம் உடனே மூடப்பட்டது. தூதரை வாபஸ் பெறுவதாக இந்தியா அறிவித்தது. இதைத்தொடர்ந்து தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் இந்தியாவுக்கு மீட்டு வரப்பட்டனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
Image : First Cry Parenting