மசூதியில் ஒலிபெருக்கி அகற்ற கூறிய ராஜ்தாக்கரே கைது செய்யப்படுகிறாரா?
By : Thangavelu
மசூதிகளில் உள்ள ஒலி பெருக்கியை அகற்றுவதற்கு ராஜ் தாக்கரே இன்றுடன் (மே 4) கெடு விதித்திருப்பதால் மும்பையில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டிற்கு வெளியில் அதிகளவிலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே, மசூதிகளில் இருக்கும் ஒலி பெருக்கிகள் பொதுமக்களுக்கு மிகப்பெரிய இடையூறு ஏற்படுத்துகிறது. எனவே அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இதில் மொத்த மாநிலத்தில் உள்ள ஒலிபெருக்கிகளையும் மே 3ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்ற கெடுவையும் விதித்திருந்தார். ஆனால் அன்றைய நாள் ரம்ஜான் என்பதால் அதற்கு அடுத்த நாளான 4ம் தேதி அகற்ற வேண்டும் எனக் கூறியிருந்தார். இதனை அவுரங்காபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராஜ்தாக்கரே அரசுக்கு இறுதி கெடு விதித்திருந்தார். ஆனால் வன்முறையை தூண்டுகின்ற வகையில் பேச்சு இருப்பதால் போலீசார் நேற்று ராஜ்தாக்கரே மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
மேலும், எந்த மசூதியிலாவது ஒலி பெருக்கி மூலமாக சத்தம் வந்தால், அங்கே அனுமன் பாடலை ஒலி பெருக்கி மூலம் வையுங்கள் என்றார். அப்போதுதான் அவர்களுக்கு ஒலிபெருக்கியால் ஏற்படும் பாதிப்பு தெரிய வரும் என்று ராஜ்தாக்கரே கூறியிருந்தார்.
இந்நிலையில், ராஜ்தாக்கரே கெடு விதித்திருப்பதால் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, மாநில உள்துறை அமைச்சர் திலிப் வல்சே பாட்டீலுடன் சட்டம், ஒழுங்கு பற்றி ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் போலீசாரின் விடுமுறை ரத்து செய்யப்பட்டு பணிக்கு வர வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ராஜ்தாக்கரே இல்லத்திற்கு வெளியில் பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எனவே அவரை எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார் என்பதால் மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
Source, Image Courtesy: Vikatan