Kathir News
Begin typing your search above and press return to search.

பாரதத்தாயின் நாவில் இருக்கும் தமிழ் மொழி - காசியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்!

பாரதத்தாயின் நாவில் இருக்கும் தமிழ் மொழி - காசியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Dec 2022 10:42 AM IST

பாரதத்தாயின் நாவில் இருக்கும் தமிழ் மொழியின் பெருமையை நன்கு உணர்ந்துள்ள பிரதமர்மோடி, உன்னதமான தமிழ் மொழியைக் கவுரவிக்கும் வகையில், உலக அரங்குகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும், திருக்குறள், சங்க தமிழ் இலக்கியங்களில் இருந்து மேற்கோள் காட்டி பேசி வருகிறார் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

காசிக்கும், தமிழகத்துக்கும் இடையேயான புராதனமான தொடர்பை எடுத்துக்கூறி, ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற பிரதமரின் முழக்கத்தை நனவாக்குவதே காசி தமிழ் சங்கமத்தின் தலையாய நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.

நீண்ட காலமாக, இசை மூலமாக எப்படி தொடர்புகளை வளர்த்தார்கள் என்பதை காசியில் நடப்பதுதான் காஞ்சியில் நடக்கிறது என்று காணும் போது உணர முடிகிறது. இரண்டு உயர்ந்த கல்வி மையங்களாக காஞ்சியும், காசியும் இருந்துள்ளன. உன்னதமான பல்கலைக்கழகங்கள் என்று பேச ஆரம்பித்தால், பீகாரில் இருந்த நாளந்தா, அதை அழித்து விட்டனர், ஆனால், அதன் சின்னங்கள் இன்றும் இருக்கின்றன. ஆனால், லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எரிக்கப்பட்டன. கல்விக்கு ஆதாரம் இருக்கக்கூடாது, கல்விக்கு பயன்படக்கூடிய சாதனங்கள் இருக்கக்கூடாது என அவற்றை எரித்தார்கள்.

காசியில் இன்றும் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. படிப்பது மட்டுமல்லாமல், கலைகள் வளர்க்கப்படுகின்றன. குமரகுருபரர் இங்கு வந்து கோயிலைக்கட்டிவிட்டு, அதற்குப்பின்னர் அங்கு சென்று தருமபுரம் ஆதினத்தை நிறுவினார். காதில் கேட்டதை, அங்கும் பகிர வேண்டும் என்ற எண்ணம்தான் அதற்கு காரணம். ஞானம் என்பது பகிரப்பகிர அதிகமாகும். காதால் கேட்டதை நமக்குள்ளேயே அறிந்து கொண்டதன் மூலம், தமிழில் பல கவிதைகள் உருவாகின.

இத்தகைய எண்ணங்களை நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானதே காசி தமிழ் சங்கமம். காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே புராதனமாக நிலவிய தொடர்புகளை அழகிய தமிழில் சிறு, சிறு விளக்கங்களுடன் ஹேமா ஹரி எழுதி இருக்கிறார்கள். அதை அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். இதை எடுத்துச் சென்று அனைவருக்கும் கொடுக்க வேண்டும்.

எதிர்மறையாக பேசுபவர்கள், தவறாக பேசுபவர்களிடம் இதை ஆதாரமாக காட்ட வேண்டும். இதை திருப்பி, திருப்பி சொல்ல வேண்டும். நான் தமிழ்நாட்டில் சிறு வயது முதல் இருந்து சிலவற்றை அனுபவித்து தெரிந்து கொண்டேன். நமது ஊர்களில், பக்திக்காகவோ, கலைகளை வளர்ப்பதற்காகவோ சில நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். கதா காலேட்சபம், புலி வேடம் கட்டி ஆடுதல், கதைகளை கூறுதல், கோலாட்டம் போன்றவை நடைபெறும். இதையெல்லாம் திரும்பத்திரும்பக் கூறி இந்த கலைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் இவற்றை எல்லாம் நடத்துவது வழக்கம். சிறுவர்கள் இதைப்பார்த்து சந்தேகங்களை கேட்பதும், பெரியவர்கள் அதற்கு விளக்கம் கூறுவதும் வாடிக்கை.

கன்றை இழந்த பசு மணியை அடித்து நியாயம் கேட்பது பற்றி கூறும்போது, மாடு பேசுமா எனக் குழந்தை கேட்கும். மாட்டின் கண்ணீர் அதைக் காட்டும் என்று அம்மா விளக்கம் கூறுவார்கள்.

எனவே இந்த ஆதாரத்தை எல்லாம் எடுத்துக்காட்டி, உண்மைக்குப் புறம்பாக பேசாதீர்கள் என அவர்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டிய கடமை நமக்கு உண்டு. நமது பிரதமர், திருக்குறள், சங்க இலக்கியங்கள், புறநானூறு, அகநானூறு ஆகியவற்றை எடுத்து ஒவ்வொரு சபையிலும் சொல்லி வருகிறார். அதைப்பார்க்கும் போது, நமக்கு பெருமையாக உள்ளது.

அவர் ஒவ்வொரு பாரம்பரியத்துக்கும் மதிப்பு அளித்தாலும், தமிழ் என்று வரும்போது, அது பாரதத்தாயின் நாவில் இருக்கும் மொழி எனப்புரிந்து கொண்டு அதைப் போற்றி வருகிறார். நாம் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றுதான் இதை அவர் கூறுகிறார். ஆனால், சிலர் இந்தி திணிப்பு என விதண்டாவாதம் பேசுகின்றனர். அரசியல் காரணங்களுக்காக நமது பழம்பெரும் கலாச்சாரத்தை மறந்து விடுவதா, அல்லது அதை ஒருபக்கம் ஒதுக்கி வைத்து விடுவதா எனப்பார்க்கும் போது, இந்த தமிழ் சங்கமத்தின் முக்கியத்துவம் நமக்கு புரியும் என்றார்.

Input from: PIB

Next Story
கதிர் தொகுப்பு
Trending News