Kathir News
Begin typing your search above and press return to search.

உலகிலேயே உயரமான பாலம் - 4 மணி நேரத்தில் ஜம்மு to வைஷ்ணவ தேவி.!

உலகிலேயே உயரமான பாலம் - 4 மணி நேரத்தில் ஜம்மு to வைஷ்ணவ தேவி.!

உலகிலேயே உயரமான பாலம் - 4 மணி நேரத்தில் ஜம்மு to வைஷ்ணவ தேவி.!
X

Yendhizhai KrishnanBy : Yendhizhai Krishnan

  |  9 Nov 2020 1:45 PM IST

விடுதலைக்குப் பின்னர் ஜம்முவை காஷ்மீர் பள்ளத்தாக்குடன் இணைக்கும் வகையில் முதல் முறையாக இந்திய ரயில்வே அமைக்க உள்ள புதிய ரயில் பாலம் பயண நேரத்தை வெறும் நான்கு மணி நேரமாகக் குறைக்க உள்ளது. இந்த ரயில் பாலம் சேனப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் கட்டப்படுகிறது. கத்ரா- பனிஹால் ரயில் பாதையில் அமைக்கப்படும் இந்த பாலம் உலகிலேயே உயரமான ரயில் பாலம் என்ற பெருமையைப் பெற உள்ளது. கரோனா வைரஸ் தொற்று சூழலால் கட்டுமானப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்திய ரயில்வே துறைக்கு தேவையான பாதுகாப்பு அனுமதி உட்பட அனைத்து உதவிகளையும் தக்க சமயத்தில் செய்து ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் பாலம் அமைக்கும் பணி விரைவில் முடிய உதவி வருகிறது.

இந்திய ரயில்வேயின் வரலாற்றிலேயே முதல்முறையாக ஜம்முவுடன் காஷ்மீர் பள்ளத்தாக்கை இணைப்பதற்காக சேனப் நதியின் குறுக்கே கத்ரா- பனிஹால் இடையிலான 111 கிலோ மீட்டர் தூரத்தில் இது மாதிரியான 36 ரயில் பாலங்களும் 27 சுரங்கப் பாதைகளும் அமைக்கப்பட உள்ளன. இதனால் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியை ஒட்டி இருக்கும் காஷ்மீர் மக்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் ஏற்படுவதோடு வியாபாரத்திற்காக நாட்டின் பிற பகுதிகளுக்கு எளிதாக பயணிக்க இந்த ரயில்வே பாதை உதவியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1.3 கிலோ மீட்டர் நீளமுள்ள ரயில்வே பாலம் அமைக்கும் பணி கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது 380 மீட்டர் வரை பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்தப் பணியில் 27,000 மெட்ரிக் டன் உலோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது போல் மேலும் சிறிய சிறிய 36 பாலங்கள் இந்த பாதையில் அமைக்கப்பட உள்ளன. இதனால் கத்ரா- பனிஹால் பயண தூரம் இரண்டு மணி நேரமும் பனிஹால்- ஸ்ரீ நகர் அல்லது பாரமுல்லா இடையிலான தூரத்தை கடக்க மேலும் இரண்டு மணி நேரமும் மட்டுமே ஆகும். இதனால் கத்ரா வைஷ்ணவி கோவிலுக்கு செல்பவர்கள் ஜம்முவில் இருந்து 4 மணி நேரத்தில் கோவிலைச் சென்றடைய முடியும்.

மொத்தம் 111 கிலோ மீட்டர் தொலைவு உள்ள இந்த ரயில் பாதையில் 87% சுரங்கப்பாதை வழியாக செல்லும் என்றும் 7% பாலங்கள் மூலம் செல்லும் என்றும் ரயில்வே பொறியாளர்கள் கூறியுள்ளனர். இவற்றில் 12.7 ஐந்து கிலோ மீட்டர் நீளமுள்ள ஒரு சுரங்கப்பாதை இந்தியாவிலேயே நீளமானதாக அமைய உள்ளது. இவ்வாறு பல புதிய சாதனைகளைப் படைக்க உள்ள இந்த ரயில் பாதை காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள வைஷ்ணவ தேவி கோவிலுக்கு புனித யாத்திரை செல்லும் பக்தர்களுக்கும் ஸ்ரீ நகரில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் பொதுமக்களுக்கும் பயண நேரத்தைக் குறைத்து பயணத்தை இனிமையாக்க உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News