பட்டாசு வெடிப்பதற்கு தடைப் பட்டியலில் புதிதாக சேர்ந்த மூன்றாவது மாநிலம்.!
பட்டாசு வெடிப்பதற்கு தடைப் பட்டியலில் புதிதாக சேர்ந்த மூன்றாவது மாநிலம்.!

கொரோனா நெருக்கடியை அடுத்து, மாநிலம் முழுவதும் பட்டாசுகளைப் பயன்படுத்துவதற்கு பல்வேறு மாநில அரசாங்கம் தடை விதித்து வருகின்றனர். இதனால் தொடர்ந்து சிக்கிம் அரசாங்கம் நேற்று, பட்டாசு வெடிப்பதற்கு முழுமையான தடை விதித்துள்ளது. இது குறித்த சிக்கிம் தலைமைச் செயலாளர் எஸ்.சி.குப்தா கூறுகையில், "பேரழிவு மேலாண்மைச் சட்டம், 2005 இன் விதிகளின் கீழ், மாநிலத்தில் பட்டாசுகளை வெடிக்க முழுமையான தடை விதிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதனால் அனைவரும் இதனை பின்பற்றும்படி அறிவுரை கூறினார்.
மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து, கணிசமான எண்ணிக்கையிலான நோயாளிகள் நோயிலிருந்து மீண்டு வந்தாலும், பட்டாசு வெடிப்பின் காரணமாக காற்று மாசுபாடு அதிகரிப்பது குணமடைந்தவர்களுக்கும் மேலும் கொரோனா நோயாளிகளுக்கும் நோயின் தீவிரத்தை அதிகப்படுத்தும் ஒரு செயலாக இருக்கலாம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவுக்கு அனைவரும் ஒத்துழைப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு தலைமை செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்".
முன்னதாக ராஜஸ்தான் மற்றும் ஒடிஷா ஆகிய மாநிலங்கள் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதித்துள்ள நிலையில், இப்பொழுது அந்த பட்டியலில் சிக்கிமும் இணைந்துள்ளது. இதற்கிடையே தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பட்டாசுத் தடை குறித்து மத்திய அரசிடம் அறிக்கை கேட்டுள்ளதால், பட்டாசு வெடிப்பிற்கு நாடு தழுவிய தடை விதிக்கப்படுமா? எனும் கேள்வியும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.