அக்னிபத் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள் மோசமான பின்விளைவுகளை சந்திப்பர்: விமானப்படைத் தளபதி எச்சரிக்கை!
By : Thangavelu
அக்னிபத் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மிகப்பெரிய பின்விளைவுகளை சந்திக்க முற்படும் என்று இந்திய விமானப்படை தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய பாதுகாப்புப் படைக்கு புதிதாக அக்னிபத் என்ற பெயரில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதன் மூலம் தேர்வு செய்யப்படுபவர்கள் 4 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள் எனவும் அதற்கு பின்னர் அவர்களுக்கு சில சலுகைகள் வழங்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் இதற்கு சில கட்சிகளின் தூண்டுதலின் பேரில் இளைஞர்கள் பலர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வடமாநிலங்களில் ரயில்களை எரிப்பது பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் வடமாநிலங்களான பீகார் மற்றும் ஒரிசா உள்ளிட்ட இடங்களில் போராட்டம் தீவிரமடைந்ததால் அங்கு இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக இந்திய விமானப்படை தளபதி வி.ஆர்.சௌத்ரி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அக்னிபத் திட்டத்துக்கு இந்த அளவுக்கு எதிர்ப்பு வரும் என எதிர்பார்க்கவில்லை. பாதுகாப்புப்படையில் வேலைக்கு சேர நினைப்பவர்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டிருப்பவர்கள் இது போன்ற போராட்டங்களில் பங்கேற்றால் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டி வரும். இது போன்ற வன்முறையில் ஈடுபடுவது கண்டிக்கதக்கது. இது போன்று ஈடுபடுவது பிரச்சனைக்கு தீர்வாகாது.
மேலும், பாதுகாப்புப்படையில் வேலைக்கு சேர நினைப்பவர்கள் காவல்துறையில் சரிபார்ப்பு சான்றிதழ் வாங்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபடும் சமயத்தில் அவர்களுக்கு அது போன்ற சான்றிதழ் கிடைக்காது. நாட்டில் புதிதாக கொண்டுவரப்பட்ட அக்னிபத் திட்டம் மிகவும் சிறப்பானதாகும். இது பற்றி மேலும் தகவல் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் அருகாமையில் உள்ள ராணுவம், கடற்படை, விமானப்படை உள்ளிட்ட முகாம்களுக்கு சென்றால் சந்தேகத்தை தீர்த்து வைப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Vikatan