மழை வெள்ளம் அடித்த அடியில், இன்னும் எழாத மாநிலங்கள்! அடுத்த மாதம் தக்காளி விலை சிக்கல் பழைய நிலைக்கு திரும்பும்!
Tomato arrival in December is expected to be at par with last year
By : Muruganandham
பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெய்த பருவம் தவறிய மழை காரணமாக தக்காளி பயிர் மற்றும் இம்மாநிலங்களில் இருந்து செய்யப்படும் தக்காளி விநியோகம் பாதிக்கப்பட்டதால், செப்டம்பர் இறுதியில் இருந்து தக்காளியின் விலை உயர்ந்து வருகிறது.
வட இந்திய மாநிலங்கள் மட்டுமல்லாமல் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பெய்த கனமழையின் காரணமாகவும் தக்காளி பயிர் மற்றும் விநியோகம் பாதிக்கப்பட்டன. நவம்பர் 25 நிலவரப்படி, தக்காளியின் அகில இந்திய சராசரி விலை ரூ 67/கிலோ ஆகும். இது கடந்த ஆண்டை விட 63% அதிகம். விநியோக சங்கிலியில் ஏற்படும் சிறிய இடையூறுகள் அல்லது கனமழை காரணமாக சேதம் ஏற்படுவதால் விலை ஏற்றம் ஏற்படுகிறது.
வட இந்திய மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து டிசம்பர் மாத ஆரம்பத்திலேயே தொடங்கும். இதன் காரணமாக வரத்து அதிகரித்து விலை வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். டிசம்பரில் தக்காளி வரத்து கடந்த வருடத்தைப் போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
வெங்காயத்தைப் பொறுத்தவரை, அக்டோபரில் விலை உயர்வு கணிசமாகக் குறைந்துள்ளது, மேலும் 2020 மற்றும் 2019-ல் இருந்த சில்லறை விலையை விடக் குறைவாக உள்ளது. நவம்பர் 25 அன்று வெங்காயத்தின் அகில இந்திய சராசரி சில்லறை விலை ரூ 39/கிலோ ஆகும். இது கடந்த ஆண்டை விட 32% குறைவாகும்.
விலை நிலைப்படுத்தல் நிதித் திட்டத்தின் கீழ், மாநில அளவிலான விலை நிலைப்படுத்தல் நிதியை உருவாக்குவதற்காக மாநிலங்களுக்கு வட்டியில்லா முன்பணம் 50:50 பகிர்வு அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதுவரை ஆந்திரா, அசாம், ஒடிசா, தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஆறு மாநிலங்கள் முன்பணமாக பெற்று மொத்தம் ரூ.164.15 கோடி மத்திய பங்காக விடுவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மாநில அளவிலான தலையீடுகளுக்கு PSF அமைக்க மற்ற மாநிலங்களுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.