'பொது சிவில் சட்டம் உடனே அமல்படுத்த வேண்டும்' - அஸ்ஸாம் முதல்வர் கூறும் காரணம்
By : Thangavelu
இந்தியா முழுவதும் உடனடியாக சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று உத்தரப்பிரதேச மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா, இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் மற்றும் உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்டோரும் ஏற்கனவே கருத்து வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில், அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, டெல்லியில் உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியை சந்தித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நான் சந்தித்த வரையில் அனைத்து இஸ்லாமியர்களும் பொது சிவில் சட்டத்தை வேண்டும் என்று கூறி வருகின்றனர். எந்த ஒரு பெண்ணும் தன்னுடைய கணவருக்கு மூன்று மனைவிகள் இருக்க வேண்டும் என்று விரும்புவதில்லை. இதனை அனைத்து இஸ்லாமியப் பெண்ணிடமும் கேட்கலாம்.
மேலும், இஸ்லாமிய ஆண் ஒருவர் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்பது அவருடைய பிரச்சினையல்ல. ஆனால் அதற்கு மாற்றாக இஸ்லாமிய தாய்மார்களின் பிரச்சினையாகும். இஸ்லாமிய பெண்களுக்கு கவுரவம் வழங்கப்பட வேண்டும் என்றால், முத்தலாக் தடைக்கு பின்னர் பொது சிவில் சட்டத்தையும் அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரே மாதிரியான சட்டம் இருக்கும். எனவே நாங்கள் அனைவரும் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக நிற்கிறோம். இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.
Source, Image Courtesy: Vikatan