திமுக - காங்கிரசை விட தமிழகத்துக்கு அதிகம் செய்தவர்கள் நாங்கள்தான்: அமித்ஷா பேச்சு முழு விவரம்.!
திமுக - காங்கிரசை விட தமிழகத்துக்கு அதிகம் செய்தவர்கள் நாங்கள்தான்: அமித்ஷா பேச்சு முழு விவரம்.!

By : Rama Subbaiah
தமிழகம் நேற்று வந்த அமித்ஷாவுக்கு விமான நிலையத்தில் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதேபோல பாஜகவினர் மற்றும் அதிமுகவினரும் வரவேற்பளித்தனர். அதன் பிறகு மாலை 4.40 மணிக்கு கலைவாணர் அரங்கம் சென்ற அமித்ஷா தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
ரூ.380 கோடி மதிப்பிலான சென்னைக்கு குடிநீர் வழங்கும் தேர்வாய்கண்டி நீர்தேக்க திட்டம் ரூ. 61,843 கோடி மதிப்பிலானசென்னை மெட்ரோ 2 ம் கட்ட திட்டம் உட்பட எட்டு திட்டங்களை தொடக்கி வைத்தார்.
அதன்பிறகு துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விழாவுரை ஆற்றினர். அதில் மாநில அரசின் பல்வேறு சாதனைகளை கூறிய அவர்கள், மத்திய அரசுக்கு பல கோரிக்கைகளை முன் வைத்தனர். அதன்பின் அதிமுக - பாஜக கூட்டணி இனிமேலும் தொடரும் என்றனர்.
அதன் பிறகு உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில்:
இந்தியாவிலேயே தமிழகம் கொரோனாவில் இருந்து அதிகம் மீண்டு வருவோரின் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அது மட்டுமல்லாமல் நீர்மேலாண்மை திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் நாட்டிலேயே மிக சிறப்பாக செயல்படுகிறது.
ஏழைகளுக்கான பல திட்டங்களை மோடி அரசு தீட்டி மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அனைவருக்குமான வங்கிக் கணக்கு திட்டம் தொடங்கப்பட்டது முதல் இலவச எல்பிஜி சிலிண்டர்கள் வழங்குவது உட்பட எந்த இடைத்தரகர்களும் இல்லாமல் அரசு நேரடியாக மக்களுக்கு உதவி வருகிறது. நாடு முழுவதும் 13 கோடி வீடுகளுக்கு எரிவாயு கொண்டு சேர்த்துள்ளது இந்த அரசு.
விவசாயிகளுக்கு ஆதரவு தொகையாக அவர்களுக்கு வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.95 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. அனைவருக்கும் வீடு என்கிற திட்டம் வருகின்ற 2022ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும்.
தமிழகத்தில் 45 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.6000 நிதியுதவி நேரடியாக அவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளது மத்திய அரசு. இன்னும் இது போன்ற திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இது போன்று காங்கிரஸ் காலத்தில் ஏதாவது செய்யப்பட்டது உண்டா?
மேலும் விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் கோடி செலவில் நபார்டு வங்கி மூலம் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இது போக நுண்ணுணவு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நீலப் புரட்சி எனப்படும் மீன் வளர்ச்சியில் தமிழகம் இப்போது நான்காம் இடத்தில் உள்ளது. மேலும் முன்னேற்றம் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
மோடி அரசின் உறுதிப்பாடு என்னவெனில் ஏழை எளிய மக்களுக்கு வீடுகளுக்கே தூய்மையான குடிநீர் இணைப்பு தரவேண்டும் என்பதுதான்.
இதிலும் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது. தமிழகத்தில் முதல்வரும், துணை முதல்வரும் சிறப்பாக ஆட்சி செய்து வருகின்றனர். தமிழகத்துக்கு மத்திய அரசின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அப்துல் கலாம் நினைவிடப்பணிகளும் மோடி அவர்களின் விருப்பதால் இங்கு சிறப்பாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.
சென்னை சென்ட்ரல் நிலையத்துக்கு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பெயரை சூட்டியது மோடி அரசுதான். திமுகவினர் தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக அடிக்கடி மத்திய அரசு மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள். நான் அவர்களிடம் ஓன்று கேட்கிறேன் நீங்கள் கடந்த 10 ஆண்டுகளில் என்ன தமிழகத்துக்கு செய்து உள்ளீர்கள், நாங்கள் அதைவிட செய்துள்ளோம் எங்களிடம் விபரங்கள் உள்ளது. அது பற்றி தனியாக விவாதிக்க நான் தயார்.. நீங்கள் தயாரா? எனக் கேட்டார்.
மேலும் பிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டில் எல்லா இடங்களிலும் குடும்ப அரசியலை மக்கள் தூக்கி எறிந்துவிட்டார்கள். அதேபோல தமிழகத்திலும் நடக்கும், நண்பர்களே நான் ஓன்று கேட்கிறேன் காங்கிரசும்- திமுகவும் சேர்ந்து மற்ற கட்சிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறலாமா, இவர்களுக்கு அந்த அருகதை உள்ளதா? 2 ஜி விஷயத்தில் பல கோடி ஊழல் செய்தவர்கள், இவர்கள் தங்கள் நடவடிக்கைகளை பின்னோக்கி பார்க்க வேண்டும்.
கொரோனா காலத்தில் பருப்பு வகைகள் உள்ளிட்ட அனைத்து உணவு வகைகளையும் தமிழகத்துக்கும் அளித்துள்ளோம், இலவச சிலிண்டர்களை ஏழைப் பெண்களுக்கு அளித்துள்ளோம். இக்காலக் கட்டத்தில் அனைவருக்கும் வங்கிக் கணக்கு திட்டத்தில் கணக்குள்ள தமிழக ஏழை பெண்களுக்கு கிட்டத்தட்ட ரூ.1000 கோடி வரை மாதம் ரூ.500 என வழங்கியுள்ளோம்.
தமிழக அரசு பாறைபோல உறுதியாக உள்ளது, இதைக் காப்பாற்ற முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகிய உங்களுடன் நான் தோளோடு தோளாக நிற்பேன்.
பிரதமர் மோடியால் இந்தியாவுக்கு உலகெங்கும் நன்மதிப்பு கிடைத்ததுடன் இந்தியாவுக்கு சிறந்த பாதுகாப்பும் கிடைத்துள்ளது.
நம்முடைய பாதுகாப்பு படையினர் சமீபத்தில் நான்கு பயங்கரவாதிகளை கொன்றுள்ளனர். பிரதமர் மோடி அவர்களின் அரவணைப்பில் நம் வீரர்கள் மிக சிறந்த முறையில் செயல்பட்டு வருகின்றனர்.
பிரதமர் மோடி அவர்களால் இந்தியா முன்னணி நாடாக உள்ளது, மிக சிறந்த வளர்ச்சியை நோக்கி இந்தியா செல்கிறது,பிரதமர் மோடியால் இராணுவ படைகளின் பலம் பல மடங்கு அதிகரித்துள்ளது, நம் நாட்டுக்கு மிக சிறந்த பாதுகாப்பும் கிடைக்கிறது எனக் கூறி தமிழக மக்களுக்கு எனது வணக்கங்களை காணிக்கையாக்குகிறேன் என்றார்.
