இனி எதற்கு கவலை? கொரோனா தடுப்பில் பிரம்மிக்க வைக்கும் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் கண்டுபிடிப்பு!
இனி எதற்கு கவலை? கொரோனா தடுப்பில் பிரம்மிக்க வைக்கும் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் கண்டுபிடிப்பு!

கொரோனா பெருந்தொற்று காலத்தில், சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களின் பாதுகாப்புக்கு உதவவும், அதே நேரத்தில் அவசர சிகிச்சைக்கு பயன்படும் விதத்திலும், மருத்துவ உபகரணங்களை வடிவமைப்பதில், மத்திய அரசின் உதவியுடன் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
வென்டிலேட்டர்கள், நோயாளிகளைத் தொடாமல் பரிசோதிக்கும் சுவாசக் கருவிகள், நோயாளிகளைக் கண்காணிக்கும் சாதனங்கள் ஆகியவற்றை புதுமையான வகையில் தயாரிக்கும் பணிகளில் ஈடுப்பட்டுள்ளன.
மும்பை ஐஐடியின் ஆதரவுடன் ஆயு சாதனங்கள் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம், ஒரு டிஜிட்டல் ஸ்டெதாஸ்கோப்பை கண்டுபிடித்துள்ளது. நோயாளிகளிடமிருந்து பாதுகாப்பான தூரத்தில் இருந்து கொண்டே இந்த கருவியின் உதவியுடன் நோயாளியின் இதயத்துடிப்பு, நுரையீரல் செயல்பாடுகளை அறிந்து கொள்ள முடியும். இந்தக் கருவி நோயாளியின் வழக்கத்துக்கு மாறான இதயத்துடிப்பு மற்றும் நோயாளியின் உடல் நலக்குறைவை கண்டறிய உதவும்.
வயர்லெஸ் இணைப்பில் அதாவது ப்ளூடூத் இணைப்பில் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருந்து இது செயல்படும். நோயாளி தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணத்தில் இருக்கும்போதும் கூட இந்த சாதனத்தில் இருந்து நோயாளியின் இதயதுடிப்பு உள்ளிட்டவற்றை பெற முடியும்.
அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, உற்பத்தியை அதிகரிக்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனம் டெலிமெடிசின் பிரிவுக்கான ஸ்டெதாஸ்கோப்பை ஏற்கனவே வெற்றிகரமாக வணிகமயமாக்கி உள்ளது.
அடுத்து அம்பாலா நகரில் உள்ள வால்நெட் மெடிக்கல் நிறுவனம், மருத்துவமனைகள் தங்கள் வளாகத்துக்கு உள்ளேயே ஆக்சிஜனை உற்பத்தி செய்ய உதவும் ஒரு சிறிய ஆக்ஸிஜன் செறிவு கருவியை உருவாக்கி உள்ளது. இது நோயாளியின் ஆக்ஸிஜன் அளவைக் கண்டுபிடித்து, நோயாளியின் தேவைக்கு ஏற்ப போதுமான ஆக்ஸிஜனை அளிக்கக் கூடிய கருவியாகும்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஆக்ஸிஜன் செறிவு கருவியாகும். இதனை தானியங்கி ஆக்ஸிஜன் ஏற்றும் தொழில்நுட்பத்தில் எளிதாக இணைக்க முடியும். நோயாளிக்கு ஹைபராக்ஸியா ஏற்படாமல் தடுக்கிறது.