ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்கப்படுமா? என்ன சொல்கிறது மத்திய அரசு!
By : Parthasarathy
2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு நீக்கி, இந்த மாநிலத்தை ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதனை அடுத்து ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை வழங்குவது தொடர்பான கேள்விகளை தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். இதற்கு பதில் அளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் கூறுகையில் " காஷ்மீரில் முழுமையாக அமைதி திரும்பிய உடன், உரிய நேரத்தில் ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்கப்படும். ஜம்மு - காஷ்மீரை யூனியன் பிரதேசமாக அறிவித்த பின்னர் அங்கு பயங்கரவாத சம்பவங்கள் குறைந்து வருகின்றன. கடந்த, 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2020 ஆம் ஆண்டில் பயங்கரவாத சம்பவங்கள் 59 சதவீதம் குறைந்துள்ளது. அதே போல் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரையிலான காலத்தில், 32 சதவீதம் வரை பயங்கரவாத சம்பவம் மற்றும் தீவிரவாத செயல்கள் குறைந்துள்ளது.
காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட காஷ்மீரி பண்டிட்களை மீண்டும் காஷ்மீரில் குடியமர்த்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்குள்ள காஷ்மீரி பண்டிட் மற்றும் டோக்ரா ஹிந்து பிரிவைச் சேர்ந்த, 900 குடும்பங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது." என்று அமைச்சர் பதில் அளித்தார்.