Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் வரும் 2021 தேர்தலில் 50 இடங்களில் ஒவைசியின் கட்சி போட்டியா? - தமிழக கட்சிகள் கிலி.!

தமிழகத்தில் வரும் 2021 தேர்தலில் 50 இடங்களில் ஒவைசியின் கட்சி போட்டியா? - தமிழக கட்சிகள் கிலி.!

தமிழகத்தில் வரும் 2021 தேர்தலில் 50 இடங்களில் ஒவைசியின் கட்சி போட்டியா? - தமிழக கட்சிகள் கிலி.!
X

Rama SubbaiahBy : Rama Subbaiah

  |  22 Nov 2020 2:37 PM IST

தெலங்கானாவில் உள்ள ஹைதராபாத் நகரம் முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் மாநகரமாகும். அதிக அளவில் நவீனத்தின் தாக்கத்தை உணராத அல்லது விரும்பாத பாரம்பரிய முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இடம் ஹைதராபாத் நகரமாகும். இந்த ஹைதராபாத் எப்போதுமே காங்கிரசின் நிரந்தரமான கோட்டையாக 2000 ஆம் ஆண்டு வரை இருந்தது.

அதன் பின் பல காரணங்களால் காங்கிரஸ் செல்வாக்கிழந்த நிலையில் இங்கு நன்கு படித்தவரான ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி செல்வாக்கு பெறத் தொடங்கியது. ஐதராபாத் நாடாளுமன்ற தொகுதியின் எம்பியாக தொடர்ச்சியாக நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு வருபவர் ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சித் தலைவர் ஓவைசி.

ஒவைசியின் இந்த வெற்றிக்கு காரணம் அவர் கொண்ட கொள்கைதான் என்கிறார்கள் ஆந்திர அரசியல் பிரமுகர்கள். ஒரு பக்கம் தீவிர இஸ்லாம் மார்க்கம், அதே சமயம் இன்னொரு பக்கம் ஆழமான இந்திய தேசீயம் என்ற இருமுனை கொள்கைகளை கொண்ட இவரின் புதிய சிந்தனை காங்கிரஸ் கலாச்சாரத்தில் ஊறிப் போயிருந்த ஹைதராபாத் வாசிகளுக்கு மிகவும் பிடித்து விட்டது,

எனவே ஹைதராபாத்தில் உள்ள குறிப்பாக பழைய ஹைதராபாத்தில் அடர்ந்து வாழும் இஸ்லாமியர்களின் செல்ல கட்சியாக இவரது கட்சி மாறியது.

மற்ற இஸ்லாமிய கட்சிகளில் பெரும்பாலான கட்சிகள் ஆளும் கட்சி அல்லது மற்ற பெரிய கட்சிகள் தரும் தொகுதிகள் ஒதுக்கீட்டுடன் திருப்தி பட்டுக் கொள்ளும். அதன் பிறகு அவர்கள் மிகப்பெரிய அளவில் முஸ்லிம் பிரச்சனைகளை மற்ற அரசியல் கட்சிகளை மீறி எதிரொலிக்க மாட்டார்கள், ஆனால் ஒவைசி தன் மனதில் படும் எதையும் நறுக் என கூறிவிடுவார். அதே சமயம் இந்திய அரசியல் சாசன விதிகளுக்கு உட்பட்டு எதையும் சிந்திப்பவர், உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதத்தை இவர் ஆதரிக்க மாட்டார்,

அதே சமயம் இந்தியா இஸ்லாமியர்களின் பிரிக்க முடியாத அங்கம் என்ற கொள்கையில் உறுதி கொண்டு பேசும் இவருடைய கருத்துக்கள் அனல் தெறிக்கும் வகையில் இருக்கும், அதனால்தான் இவருடைய பேச்சால் இப்போது ஹைதராபாத்தை தாண்டி இவருடைய செல்வாக்கு இந்தியா முழுவதும் இஸ்லாமிய இளைஞர்களிடையே வளர்ந்து வருகிறது. இவர் மூலம் வெறுப்புக்கு எதிரான புதிய விடியலை காண விருப்பப்படுகிறார்கள்.

சமீபத்தில் கூட அயோத்தி பிரச்சினையில் வக்ப் வாரியத்துக்கு ராமஜென்ம பூமிக்கு பதிலாக 5 ஏக்கர் நிலம் நீதிமன்றம் மூலம் வழங்கப்பட்டது, கொடுத்ததை வாங்கி சென்றார்கள், ஆனால் ஒவைசி தீர்ப்பை மதிக்கிறேன் என்றார், என்றாலும் பதிலுக்கு வழங்கப்பட்ட இடம் மிகவும் சிறியது, இன்னும் கவுரவமான வழியில் இஸ்லாமியர்களுக்கு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றார்.

இந்த கருத்து அப்போது இந்திய முஸ்லிம்களை இவர் பக்கம் ஈர்த்தது. தற்போது லோக்சபாவில், இந்தக் கட்சிக்கு, ஓவைசி உட்பட, இரண்டு எம்.பி.,க்கள் உள்ளனர். ஐதராபாதில் மட்டுமே செயல்பட்டு வந்த இந்தக் கட்சி, தேசிய அளவில் பிரபலமாகி சமீபத்தில் மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், இரண்டு இடங்களில் வென்றது.

தெலுங்கானா சட்டசபை தேர்தலில், ஏழு இடங்களில் வென்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.சமீபத்தில் பீஹார் சட்டசபைக்கு நடந்த தேர்தலில், போட்டியிட்ட, 20 இடங்களில், ஐந்து தொகுதிகளில் வென்று அசத்தியது.

'பீஹாரில், ஆட்சியை பிடிக்க முடியாததற்கு, ஓவைசி கட்சி தனியாக கூட்டணி அமைத்து போட்டியிட்டதே காரணம்' என, ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் புலம்பும் அளவுக்கு அவர் தனது கட்சியின் மதிப்பை வளர்த்துக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள மேற்கு வங்க சட்டசபை தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக, ஓவைசி ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்நிலையில் மேற்கு வங்கத்துடன், தமிழக சட்டசபைக்கு நடக்கும் தேர்தலிலும் போட்டியிட, ஏ.ஐ.எம்.ஐ.எம்., திட்டமிட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும், 15 மாவட்டங்களில் உள்ள, 50 தொகுதிகளில் போட்டியிட, 'சர்வே' எடுக்கப்பட்டு வருவதக்கவும், அடுத்த மாதம் நடக்கும், கட்சியின் செயற்குழுவில் இதற்கான இறுதி முடிவு எடுக்கப்படும் என அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

ஒவைசியின் இந்த புதிய வருகை குறித்த அறிவிப்பு இப்போதே தமிழகத்தில் உள்ள தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகளுக்கு மட்டுமல்ல, இவர்களை சார்ந்து இருக்கும் மற்ற இஸ்லாமிய கட்சிகளுக்கும் கிலியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு பக்கம் அமித்ஷா கிலி.. இன்னொரு பக்கம் ஒவைசி கிலி என நடுங்கும் அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள படித்த, பாங்கான, தேசீய உணர்வுள்ள இஸ்லாமிய ஆண், பெண் இளைஞர்களுக்கு ஒவைசியின் வருகை மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News