தி.மு.க. காங்கிரஸ் மற்றும் வி.சி.க. கட்சியினர் ஜாதி வன்முறையை தூண்டி விடுகிறார்கள்- எல். முருகன் குற்றச்சாட்டு!
By : Shiva
தமிழகத்தில் தி.மு.க. காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஜாதி வன்முறையை தூண்டி விடுவதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ஆம் தேதி மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்கினர். இதற்கு கண்டனம் தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் இன்று மதுரைக்கு சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் 'அம்பேத்கருக்கு மரியாதை செய்வதற்கு பாரதிய ஜனதா கட்சிக்கு அனைத்து உரிமைகளும் இருப்பதாக அவர் தெரிவித்தார். பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியின் போதுதான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.
மேலும் அவர் வாழ்ந்து வந்த 5 இடங்கள் நினைவுச் சின்னங்களாக மாற்றப்பட்டன. அவருக்கு மாலை அணிவிக்கவும் உரிமை கொண்டாடவும் பாரதிய ஜனதா கட்சிக்கு அனைத்து உரிமையும் இருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் அம்பேத்கரை ஜாதிய தலைவராக மாற்றுவதற்கு விடுதலை சிறுத்தை கட்சியினர் முயற்சி செய்வதாக அவர் குற்றம் சாட்டினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு அரசியல் செய்வதற்கு வேறு எந்த விஷயமும் இல்லாததால் இதனை அரசியலாக்குகிறார்கள் என்றும் தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் வி.சி.க. கட்சியை சேர்ந்தவர்கள் ஜாதி வன்முறையை தூண்டி விடுகிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார். அம்பேத்கர் பிறந்த நாளின்போது பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துக்கொண்டார்.
அம்பேத்கரை ஜாதிய தலைவராக மாற்றத் துடிக்கும் சில அரசியல் கட்சிகளின் மன நிலையை பாஜக தலைவர் சரியாக தெரிவித்து உள்ளார் என்று சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவாக நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.