குழந்தைகளை வேனில் அழைத்துச் சென்று மதமாற்றம் - பேரிடரை பயன்படுத்திக் கொள்ளும் மிஷனரிகள்!
By : Yendhizhai Krishnan
கொரோனா தொற்றால் அனைத்து விதமான தொழில்களும் பாதிக்கப்பட்டிருக்கும் போது ஒரே ஒரு தொழில் மட்டும் செழித்தோங்குகிறது. பேரிடர் என்றால் பொதுவாக அனைத்துத் தரப்பு மக்களும் துன்புறுவர். ஆனால் இந்தத் தொழில் பேரிடரால் தான் செழிக்கும். மத மாற்றம் தான் அந்தத் தொழில்.
இதற்கு முன்னர் சுனாமி, நிலநடுக்கம், வெள்ள பாதிப்புகளின் போது இந்தத் தொழில் எப்படி செழித்து வளர்ந்தது என்பது அனைவருக்குமே தெரியும். அதே போன்று இப்போது கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலும் இந்தத் தொழில் செழித்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே நடுவக்குறிச்சி என்ற கிராமத்தில் உள்ள குழந்தைகளை அருகில் உள்ள பாளையம் செட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிஎஸ்ஐ கிறிஸ்தவ பிரிவைச் சேர்ந்த மிஷனரிகள் தினமும் வேனில் அழைத்துச் சென்று மதம் மாற்றும் செயலில் ஈடுபடும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.
கிஞ்சித்காரம் தர்ம சம்ஸ்தாபனம் அமைப்பு தங்களது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள தகவல்களின் படி, நடுவக்குறிச்சி கிராக் குழந்தைகள் காலையில் ஒரு வேனில் ஏற்றிச் செல்லப்படுவதாகவும் பின்னர் மதியம் வந்து விட்டு விட்டுச் செல்வதாகவும், இந்த வகையில் பல குழந்தைகளையும் சில பெரியவர்களையும் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விஷ்வ இந்து பரிஷத் அமைப்புக்கு இது குறித்த தகவல் கிடைத்ததை அடுத்து பிரச்சினையின் அடிப்படையை சரி செய்யும் முயற்சியில் அந்த அமைப்பினர் கிராமத்துக்குச் சென்று மதியம் வேனில் அழைத்து வந்து விட்டுச் செல்லப்பட்ட குழந்தைகளிடம் இந்து மதத்தின் பெருமைகள், இதிகாசங்கள், வாழ்வியல் முறை போன்றவற்றை அவர்களுக்கு புரியும் வகையில் எளிதாக சொல்லிக் கொடுத்துள்ளனர்.
மேலும் இது போன்ற மத மாற்ற கும்பல்கள் வந்து அழைத்தால் செல்லக் கூடாது என்றும் குழந்தைகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் இது தற்காலிக தீர்வு தான் என்பதால் மேலும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டவும், மிஷனரிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் விஎச்பி முயன்று வருகிறது. இதையொட்டி விஎச்பி அமைப்பாளர்கள் பாளையங்கோட்டை தாசில்தாரை சந்தித்து புகார் அளித்துள்ளனர். உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் கிராம மக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் எச்சரித்துள்ளனர்.
கொரோனா பரவலால் பள்ளிகள் செயல்படாதது மிஷனரி அமைப்புக்களுக்கு சாதகமாக இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் பழங்குடியினர் வசிக்கும் மலை கிராமம் ஒன்றில் சமூக சேவை செய்யத் வந்ததாக கூடாரம் போட்ட திருமணமான பாதிரியார் ஒருவர் ஊரடங்கு சமயத்தில் குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லித் தருகிறேன் என்று ஒரு 13 வயது பெண் குழந்தையைக் கடத்திச் சென்று விட்டார். இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் குழந்தைகள் மிஷனரிகள் கையில் சிக்காமல் பாதுகாப்பது பெற்றோரின் கடமை.