மண்ணையும் மக்களையும் காக்க மரம் நடுவோம் - உலக பூமி தினத்தில் சத்குரு வேண்டுகோள்!
By : G Pradeep
மண்ணின் வளத்தையும், மக்களின் ஆரோக்கியத்தையும் காப்பதற்கு மரங்கள் நடுவது மிக அவசியம் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.
உலக பூமி தினத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தி:
இந்தியாவில் சுமார் 16 கோடி ஹெக்டேர் விளைநிலங்கள் உள்ளன. ஆனால் நம் மண்ணில் போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாததால் கிட்டத்தட்ட 60 சதவிகிதம் விளைச்சலுக்கு ஏற்புடைய மண் அல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்னும் 25 முதல் 30 ஆண்டுகளில், இந்த தேசத்தில் நமக்குத் தேவையான உணவை வளர்க்க முடியாமல் போகலாம்.
எந்தவொரு தொழில்நுட்பமும் இல்லாமல், பாரம்பரிய அறிவுடன், நம் விவசாயிகள் 100 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு உணவளித்து வருகின்றனர். இது நாட்டின் மிகப்பெரிய சாதனை. ஆனால், தண்ணீர் பற்றாகுறை மற்றும் மண் வள குறைப்பாட்டின் காரணமாக விவசாயிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
தற்போதைய விவசாயிகள் தங்கள் குழந்தைகள் விவசாயத்திற்கு செல்வதை விரும்பவில்லை. இது ஒருபுறம் இருக்க, நாம் மண்ணின் தரத்தை இழந்து கொண்டிருக்கிறோம், மறுபுறம் விவசாயிகள் தங்கள் அடுத்த தலைமுறையை விவசாயத்தில் ஈடுபடுத்தவில்லை. இதன் பொருள் இன்னும் 25 ஆண்டுகளில், நாம் நிச்சயமாக ஒரு பெரிய உணவு நெருக்கடியை எதிர்கொள்ள விருக்கிறோம் என்பதை காட்டுகிறது.
தண்ணீரும் உணவும் இல்லாதபோது நிகழும் உள்நாட்டு நெருக்கடியின் நிலை நாட்டை பல்வேறு வழிகளில் துன்பப்படுத்தும். கிராமங்களில் நீர் முழுவதுமாக வற்றிவிட்டால் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் நகர மையங்களுக்கு குடிபெயரப் போகிறார்கள். அடுத்த 8 முதல் 10 ஆண்டுகளில், தீர்க்கமாய் ஏதோவொன்றை செய்யாவிட்டால், இதுபோன்ற பூதாகரமான சூழ்நிலைகளை நாம் சந்திக்க நேரிடும்.
வெப்பமண்டல தேசத்தில் நம்மிடம் உள்ள ஒரே நீர் ஆதாரம் பருவமழை. 45 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை பருவமழை பூமியில் பொழிகிறது. 60 நாட்களில் இறங்கும் இந்த நீரை, ஆறுகள், ஏரிகள் மற்றும் நீர்நிலைகளுக்கு உணவளிக்க 365 நாட்கள் மண்ணில் பாதுகாக்க வேண்டும். கணிசமான தாவரங்கள் மரங்கள் இல்லாமல் இதை நாம் செய்ய வழி இல்லை.
வளமான மண் தான் நம் தேசத்தின் உண்மையான சொத்து. அடுத்த தலைமுறையைப் பொறுத்தவரை, நாம் கொடுக்கக்கூடிய மிக அருமையான விஷயம் வணிகமோ, பணமோ அல்லது தங்கமோ அல்ல - அது வளமான மண். வளமான மண் இல்லாமல், தண்ணீர் என்ற கேள்விக்கு இடமே இல்லை.
மண்ணின் வலிமை பலவீனமடைந்தால், நம் உடலும் பலவீனமடையும் - ஊட்டச்சத்தின் அடிப்படையில் மட்டுமல்ல, மிக அடிப்படையான வாழ்வியலில் கூட. இதன் காரணமாக நாம் உருவாக்கும் அடுத்த தலைமுறை நம்மைவிட திறன் குறைந்தவர்களாக இருப்பர். இது மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்.
ஆகவே, மண் வளத்தை மேம்படுத்த வேளாண் காடு வளர்ப்பு அல்லது மரம்சார்ந்த விவசாய முறை ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். இதன் காரணமாக நாங்கள் காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் மரம்சார்ந்த விவசாயத்தை பரிந்துரைத்து வருகிறோம். விவசாயிகள் தங்களுடைய பிற பயிர்களுடன் சேர்த்து அல்லது தனியாகவோ மரங்களை வளர்க்க ஆலோசனை அளித்து வருகிறோம்.
காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இதுவரை 1 கோடியே 10 லட்சம் மரங்களை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் படிப்படியாக மேலும் அதிகரிக்க உள்ளது.
இவ்வாறு சத்குரு கூறியுள்ளார்.
மேலும், சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பூமித்தாய் மிகவும் தாராளமானவள், துடிப்பானவள். அவளுக்கு நாம் வாய்ப்பளித்தால் போதும், பூமி முழுவதும் பரிபூரண செழிப்பும் அழகும் மிளிர மீட்டுவிடுவாள்" என்று குறிப்பிட்டுள்ளார்.