நெல் குடோனாக பயன்படும் கோவில் - பக்தர்களுக்கு இடையூறாக இருந்ததை அடுத்து நடவடிக்கை!
By : Yendhizhai Krishnan
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே பழமையான சிவத்தலம் நெல் மூட்டைகளை சேகரிக்க பயன்படும் குடோனாக செயல்பட்டு வருவதாக சமூக ஊடகங்களில் சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ வைரல் ஆனது. இவ்வாறு நெல் மூட்டைகள் அடுக்கப்பட்டு உள்ளதால் பக்தர்கள் கோவிலில் வழிபாடு செய்ய சிரமமாக இருப்பதாகவும் அந்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
அறநிலையத்துறை நிர்வாகத்தில் இருக்கும் இந்த கோவில் எவ்வாறு வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படலாம் என்றும் பக்தர்களுக்கு இடையூறு விளைவிப்பது சரியா என்றும் சமூக ஊடகங்களில் பலத்த விமர்சனம் எழுந்தது. இந்தப் பிரச்சினைக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை குறித்து இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம ரவிக்குமார் முன்னர் பதிவிட்டிருந்த நிலையில், அவனே தற்போது இதற்கு தீர்வு காணப்பட்டது குறித்தும் பதிவிட்டுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக மரகதவல்லித் தாயார் உடனுறை மூன்றீஸ்வரர் கோவிலில் உள்ள மண்டபங்கள் நெல் குடோனாக பயன்பட்டு வந்துள்ளன. இது குறித்து அந்த பகுதியைச் சேர்ந்த சிவபக்தரும் முன்னாள் தாசில்தாருமான ஒருவர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் துணை மேலாளரைத் தொடர்பு கொண்டு இது குறித்து விசாரித்துள்ளார். இதில் அரசு வேறு இட வசதியை ஏற்படுத்தித் தராததால் அத்தாளநல்லூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கோவிலில் நெல் மூட்டைகளை சேகரித்து நெல் கொள்முதல் நிலையமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
இதற்காக தினம் தோறும் ₹1150 வாடகை நிர்ணயித்து வாரம்தோறும் கோவில் செயல் அலுவலரிடம் செலுத்தி வந்துள்ளனர். அதேநேரம் விவசாயிகள் கோவிலை சுற்றி புதர் மண்டிக்கிடந்த பகுதிகளை ஜேசிபி எந்திரம் மூலம் தூய்மைப்படுத்தி பராமரித்து வந்துள்ளனர். எனினும் கோவிலுக்குள் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பது அனைவருக்கும் அசவுகரியமாக இருப்பதால் உடனுக்குடன் அவற்றை இயக்கம் செய்துவிடுவது நல்லது என்று தமிழக திருக்கோவில்கள் கூட்டமைப்பினர் செய்த பரிந்துரையின்படி நெல் மூட்டைகளை அவ்வப்போது கொள்முதல் செய்து அகற்றிவிட நுகர்பொருள் வாணிப கழகம் ஒப்புக் கொண்டுள்ளது.
மன்னர்கள் ஆட்சி செய்த காலம் தொட்டே வைத்தியசாலைகளாகவும், சேமிப்பு கிடங்குகளாகவும் கோவில்கள் பல்வேறு பயன்பாடுகளுக்கு உபயோகப்பட்டதோடு நமது வாழ்வியலின் மையமாக விளங்கின. எனவே தற்போதும் அவ்வாறு பயன்படுவதை ஆச்சரியம் ஏதுமில்லை. நாட்டின் பல பகுதிகளிலும் சேமிப்பு கிடங்குகளில் உரிய இட வசதி இன்மையால் உணவு தானியங்கள் வீணாகும் நிலை நிலவுகிறது.
முன்னர் கோவில்கள் அந்தந்த பகுதியில் உள்ள மக்களாலேயே நிர்வகிக்கப்பட்டதால் அவர்களின் தேவைக்கேற்ப பல விதங்களில் கலாச்சார, பண்பாட்டு மற்றும் பொருளாதார மையங்களாக செயல்பட்டன. ஆனால் ஆங்கிலேயர்களின் ஆட்சியில் கோவில்கள் அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட பின் உள்ளூர் மக்களின் பங்களிப்பு குறைந்து ஆன்மீகத்தின் மீது மக்களின் ஈடுபாடும் குறைந்துவிட்டது. இதை சரிசெய்ய கோவில்களை அரசுக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து மீண்டும் மக்களின் கையில் ஒப்படைப்பதே சிறந்தது என்கின்றனர் கோவில் சமூக ஆர்வலர்கள்.